மாம்பலம், தி.நகர், பகவந்தம் தெருவைச் சேர்ந்தவர் புஷ்பா, 48. இவர், கடந்த 2015ல் தி.நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குத்தகைக்கு குடியிருந்தார்.கடந்த 2015ம் ஆண்டு பெரு மழையால் வெள்ளம் ஏற்பட்ட போது, இவர் தங்கியிருந்த வீட்டிலும் வெள்ளம் புகுந்தது. இதையடுத்து, வீட்டை காலி செய்து, தான் அளித்த குத்தகை தொகை 12 லட்சம் ரூபாயை, வீட்டு உரிமையாளரிடம் திருப்பி கேட்டுள்ளார்.அவர், பணத்தை அளிக்காமல் இழுத்தடித்தார். ஆறு ஆண்டுகள் பொறுத்த புஷ்பா, கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம், மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியது, மேற்கு மாம்பலம், ஆரியகவுடா சாலையைச் சேர்ந்த ரவி பிரசாத், 62, என தெரியவந்தது. தொடர் விசாரணையில், தன் உறவினரின் வீட்டை அவர்களுக்கு தெரியாமல், குத்தகைக்கு விட்டு பணம் பெற்றதும் தெரியவந்தது. இந்த நிலையில், ரவி பிரசாத் தலைமறைவானார்.கடந்த மூன்று ஆண்டுகளாக போலீசாருக்கு 'தண்ணி' காட்டி வந்த ரவி பிரசாத், கும்மிடிப்பூண்டியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. நேற்று முன்தினம் அவரை கைது செய்த போலீசார், சென்னை அழைத்து வந்தனர். இவர் மீது, அசோக் நகர், கே.கே.நகர் காவல் நிலையங்களில் மோசடி வழக்குகள் உள்ளன.