| ADDED : ஆக 22, 2024 12:17 AM
அயனாவரம்,அயனாவரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், 17 வயது பூர்த்தியடையாத சிறுமி உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். கடந்த 17ம் தேதி இரவு 8:50 மணிக்கு அயனாவரம் சந்தை அருகில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தனியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.அப்போது எதிரே வந்த வாலிபர் ஒருவர் சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்துவிட்டு தப்பினார். இதுகுறித்து தனது சகோதரரிடம் சிறுமி தெரிவித்துள்ளார்.நேற்று முன்தினம் மாலை, அயனாவரம் சந்தை அருகே சிறுமி நின்று கொண்டிருந்தபோது, சில்மிஷம் செய்த வாலிபர் எதிர் திசையில் நின்று, சிறுமியை நோட்டம் விட்டார். இதை அறிந்த சிறுமியின் சகோதரர் மற்றும் உறவினர்கள், வாலிபரை மடக்கினர். தப்ப முயன்ற வாலிபரை அடித்து, அயனாவரம் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். காயமடைந்த வாலிபரை, ஸ்டான்லி மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.விசாரணையில், அயனாவரம் சந்தையில் மூட்டை தொழில் செய்யும் மணிகண்டன், 28 என்பதும், இவருக்கு ஏற்கனவே திருமணமாகி, பெண் குழந்தை இருப்பதும் தெரிய வந்தது. சிறுமியிடம் சில்மிஷம் செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்தனர்.