காக்கா ஆறுகளுக்குள் ஊடுருவிய காக்கா ஆழிஎண்ணுாரில் பகிங்ஹாம் கால்வாய், கொசஸ்தலை ஆறுகளும், பழவேற்காடு அருகே ஆரணியாறும் கடலில் கலக்கிறது. முகத்துவாரங்களில் பரவியுள்ள காக்கா ஆழிகள், தற்போது ஆறுகளுக்குள் பல கி.மீ.,க்கு ஊடுருவியுள்ளது. வரும் காலங்களில், இவை ஆறுகளின் வழியாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக நீர்வளத்துறை கண்டறிந்துள்ளது. இதனால், நீர்நிலைகள் பாதிக்கப்படுவது மட்டுமின்றி அதில் உள்ள மீன்கள், இறால்கள், நத்தைகள், நாட்டு நண்டுகள் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்களும் அழிந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே, இப்பிரச்னையில் உரிய கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது.சென்னை, ஆக. 18-எண்ணுாரில் பகிங்ஹாம் கால்வாய், கொசஸ்தலை ஆறுகள் கடலில் கலக்கின்றன. இங்கு, நன்னீர் இறால்கள், பலவகை மீன்கள் மட்டுமின்றி மஞ்சள் மட்டி, பச்சை ஆழி, நத்தை, நாட்டு நண்டு உள்ளிட்டவை அதிகளவில் இருந்தன. இவற்றை பிடித்து விற்பனை செய்து, இப்பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் தங்கள் பிழைப்பை நடத்தி வந்தனர். தற்போது, முகத்துவாரத்தில், தென் அமெரிக்க கடல் பகுதிகளில் உள்ள 'காக்கா ஆழி' என்ற சிப்பியினம் அதிகளவில் இடம்பெயர்ந்துள்ளது. திட கழிவுகளுடன் இணைந்து, கொத்து கொத்தாக சிறிய கற்களை போல அவை தென்படுகின்றன. எண்ணுார் முகத்துவாரத்தில் மட்டும் 7 கி.மீ., சுற்றளவிற்கு காக்கா ஆழிகள் உள்ளன.இவை வெளியேற்றும் கடும் துர்நாற்றம் காரணமாக, சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த நன்னீர் இறால், மீன்கள், நத்தைகள், சிப்பியினங்களையும் அழித்து வருகின்றன. மீனவர்களின் வாழ்வாதாரம் மட்டுமின்றி சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் காக்கா ஆழிகளை அழிப்பதற்கு, 160 கோடி ரூபாய் தேவைப்படும் என நீர்வளத்துறை மதிப்பிட்டு உள்ளது. இதற்கான பங்களிப்பை வழங்கும்படி எண்ணுார் துறைமுக நிர்வாகத்திடம் கேட்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான வழக்கு, தேசிய தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் நடந்து வருகிறது. காக்கா ஆழியை அகற்றுவது தொடர்பாக, தமிழக தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா தலைமையில், நீர்வளம், சுற்றுச்சூழல், மீன்வளத்துறை செயலர்கள் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி முடிவெடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பான அறிக்கையை, 27ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது. இக்கூட்டத்தில் காக்கா ஆழியை முழுமையாக அகற்றுவதற்கு, நிபுணர் குழு பரிந்துரையை கேட்க நீர்வளத்துறை முடிவெடுத்துள்ளது.இதுகுறித்து நீர்வளத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:வெளிநாட்டில் இருந்து விறகுக்காக எடுத்துவரப்பட்ட சீமை கருவேலம், வேலி காத்தான் மரங்கள் தற்போது மாநிலம் முழுதும் படர்ந்து வளர்ந்துள்ளது. இவற்றால், நீர்நிலைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதேபோல, நீர்வழியாக வந்துள்ள காக்கா ஆழியால், முகத்துவாரம் முதல் கடற்கரை பகுதிகளில் பாதிப்பு ஏற்பட துவங்கியுள்ளது.காட்டுப்பள்ளி தனியார் துறைமுகத்தில் கப்பல் உடைக்கும் பணி நடக்கிறது. அங்கிருந்து அதிகளவில் காக்கா ஆழிகள் வெளியேறி பரவி இருக்க வாய்ப்புள்ளது. இவற்றை மீனவர்கள் மற்றும் இயந்திரங்கள் வாயிலாகவும் அகற்றினாலும், மீண்டும் வருவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, ஒதுக்கப்படும் நிதியை வீணடிக்காமல், நிரந்தரமாக காக்கா ஆழியை முழுமையாக அகற்ற வேண்டும். இதற்கு, சுற்றுச்சூழல், கடலியல் வல்லுனர்கள் பரிந்துரைகள் தேவைப்படுகிறது. இதுதொடர்பாக, தலைமைசெயலர் நடத்தும் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.