கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்திற்கு 80 சதவீதம், மாதவரம் புதிய பேருந்து நிலையத்திற்கு 20 சதவீதம் மாற்றப்பட்டு உள்ளன.இதில், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து, சென்னையின் அனைத்து பகுதிகளுக்கும் இணைப்பு பேருந்து கிடைப்பதில் சிக்கல் உள்ளது.தவிர, போதிய உணவகம் இல்லாதது, ஏ.டி.எம்., மையம் ஏற்படுத்தாதது உள்ளிட்ட குறைகளை, கிளாம்பாக்கம் பயணியர் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.அதேபோல், மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்திலும், போதிய வசதிகள் ஏற்படுத்தாததால், அங்குள்ள பயணியரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.மாதவரத்தைச் சுற்றி மணலி, பொன்னேரி, மீஞ்சூர், திருவொற்றியூர், சோழவரம் உள்ளிட்ட வட சென்னை பகுதிகளில், திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, தேனி, தஞ்சை மாவட்டங்களைச் சேர்ந்த மக்களே அதிக அளவில் வசிக்கின்றனர்.அவர்கள், பண்டிகை, அரசு விடுமுறை மற்றும் விழாக்காலங்களில், சொந்த ஊர்களுக்கு பயணிப்பது வழக்கம். அந்தவகையில், அவர்களின் போக்குவரத்திற்கு, கோயம்பேடு பேருந்து நிலையம், சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் உதவின.இந்நிலையில், மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து, தென் மாவட்டங்களுக்கான 20 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டாலும், முறையான ஏற்பாடு இல்லாததால், பயணியர் அதிருப்தி அடைந்துள்ளனர்.குறைவான பேருந்துகளே இயக்கப்படுவதாலும், 200 அடி சாலை, பாடி மேம்பாலம் வலதுபுறம் திரும்பி, அம்பத்துார் தொழிற்பேட்டை வழியாக மதுரவாயல் தேசிய நெடுஞ்சாலையை அடைந்து வெளியூர் பேருந்துகள் கிளாம்பாக்கம் செல்ல, ஒன்றரை முதல் இரண்டு மணி நேரமாவதாலும், பயணியர் சிரமப்படுகின்றனர். இந்த காலதாமதத்திற்கு காரணம், தொழிற்சாலைகள் மற்றும் நெரிசல் நிறைந்த அம்பத்துார் பகுதி.எனவே, இவ்வழியே வெளியூர் பேருந்துகளை இயக்காமல், மாதவரத்தில் இருந்து புழல் வழியே மதுரவாயல் நெடுஞ்சாலையை அடைய 2 கி.மீ., துாரமே போதுமானது. ஆனால், அம்பத்துார் வழியே 15 கி.மீ., சுற்றிக்கொண்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதைத்தவிர்க்க, பெரும்பாலானோர் 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை செலவழித்து, கோயம்பேடு, கிளாம்பாக்கத்திற்கு வந்து அங்கிருந்து பேருந்து பிடித்து செல்கின்றனர்.தவிர, மாதவரம் பேருந்து நிலையத்தில் பயணியரின் வசதிக்காக உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்காக எட்டு கடைகள் இருந்தாலும், இரண்டு மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. மற்றவை மூடியே கிடக்கின்றன.அதேபோல் அவசர மருத்துவ உதவிக்கான மருந்தகம், மின் துாக்கியும் பயணியரின் பயன்பாட்டிற்கு உதவாமல் உள்ளன . உரிய ஏற்பாடின்றி, போக்குவரத்து துறை அதிகாரிகள் அவசர அவசரமாக பேருந்துகளை மாற்றியதால், முதல் கோணல் முற்றும் கோணலாக' போதிய பயணியரின்றி, மாதவரம் புறநகர் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,'மாதவரத்தில் இருந்து புழல் வழியே மதுரவாயல் - தாம்பரம் நெடுஞ்சாலையில் பேருந்துகளை இயக்குவதற்கான சாத்தியம் உள்ளது. ஆனால், அதுகுறித்து எங்களுக்கு இன்னும் உத்தரவு வரவில்லை. உத்தரவு வந்தால் அந்த வழியில் பேருந்துகள் இயக்கப்படும்' என்றனர்.கருத்து கேட்கவில்லைகிளாம்பாக்கத்தில் தென் மாவட்ட அரசு விரைவு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் இயக்க வேண்டும். விழுப்புரம், கும்பகோணம், சேலம் போக்குவரத்து கழக பேருந்துகள், கோயம்பேடில் இருந்து தான் இயக்க வேண்டும். அதேபோல், குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் வரும்போது, பெங்களூரு தடத்தில் செல்லும் பேருந்துகளை இயக்கலாம் என, பரிந்துரை செய்தோம்.ஆனால், அதிரடியாக 80 சதவீத பேருந்துகளை கோயம்பேடில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு மாற்றிவிட்டனர். போக்குவரத்து கழக அதிகாரிகளின் எந்த கருத்துகளையும் கேட்கவில்லை.- போக்குவரத்து கழக அதிகாரிகள்மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் பேருந்துகள், அம்பத்துார் வழியாக பைபாஸ் சாலையில், வானகரத்தில் கீழே இறங்கி, வானகரம் வேலப்பன் சாவடி, வெளிவட்ட சாலை வழியாக சென்றால், மதுரவாயல், திருவேற்காடு, பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் வசிக்கும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்; அரசுக்கு வருவாயும் கிடைக்கும். தற்போது நெரிசல்தான் அதிகரித்துள்ளது.- பாடலீஸ்வரன்,பயணி, மாதவரம்விழுப்புரத்திற்கு பஸ் இயக்கலாம்கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு, அங்குள்ள வசதிகள் குறித்து, பயணியரிடம் கருத்துகளை கேட்கவில்லை. தமிழக அரசு தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது. பயணியரின் கருத்துகளை கேட்டறிந்து, சில மாற்றங்களை செய்ய வேண்டும். கோயம்பேடில் இருந்து 80 சதவீதம் பேருந்துகள் கிளாம்பாக்கத்திற்கு மாற்றிருப்பது, பயணியர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் உள்ளிட்ட குறுகிய துாரம் செல்லும் பேருந்துகள், கோயம்பேடில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சடகோபன், தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மைய தலைவர்டீசல் நிரப்ப வசதியில்லைகிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இன்னும் போதிய அளவில் வசதிகள் கொண்டுவரவில்லை. சாப்பிட ஊரப்பாக்கம், வண்டலுாருக்கு செல்ல வேண்டியுள்ளது. அதுபோல், பேருந்துகளுக்கான டீசல் நிரப்பும் வசதியும், இங்கு ஏற்படுத்தவில்லை. தாம்பரம் அல்லது வேறு பணிமனைகளில்தான் பேருந்துகளுக்கு டீசல் நிரப்பி வருகிறோம். விழுப்புரம், திண்டிவனம் செல்வோர், கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகளில் ஏற வேண்டுமென்பது தேவையற்றது. பயணியருக்கு ஏற்படும் வீண் அலைச்சலால், தினமும் எங்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுபட்டு வருகின்றனர்.- பஸ் ஓட்டுனர், நடத்துனர்கள்புது சிக்கல்கிளாம்பாக்கத்தில் இருந்து இணைப்பு பேருந்துகள், சென்னையில் அனைத்து இடங்களுக்கும் செல்லும் நடைமுறையில் சிக்கல் இருக்கிறது. பொதுமக்களுக்கு பேருந்து போக்குவரத்து வசதி போதிய அளவில் கிடைக்காவிட்டால், அவர்கள் தனியார் மற்றும் சொந்த வாகனங்களை அதிகளவில் பயன்படுத்துவர்.இது, தற்போதுள்ளதைவிட அதிக போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும். கிளாம்பாக்கத்தில், மின்சார ரயில் நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் வசதி கொண்டுவரும் திட்டத்தை, இனியும் தாமதிக்காமல் துரிதப்படுத்த வேண்டும்.- சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர்
கோயம்பேடு நிலையத்தை
பயன்படுத்த முடியாதது ஏன்?கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தை, மக்களின் தேவைக்கு ஏற்ப மேம்படுத்துவது குறித்து நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:கடந்த, 2002ல் பேருந்து நிலையம் வந்த பின் கோயம்பேடில் அபரிமிதமாக வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து மட்டுமல்லாது, பல்வேறு கோணங்களில் மக்களின் அடர்த்தி அதிகரித்துள்ளதால், தொழில் ரீதியாக இங்கு குடியேறினர்.இந்நிலையில், கோயம்பேடுக்கு அடுத்த நிலையில், புதிய இடத்தில் பேருந்து நிலையம் கட்டுவதற்கு முன், இங்கு மேற்கொள்ள வேண்டிய வசதிகள் குறித்து, அதிகாரிகள் திட்டமிட்டு இருக்க வேண்டும்.குறிப்பாக, கோயம்பேடுக்கு வெளியூர் பேருந்துகள் வந்து செல்வதால், பல்வேறு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறப்படுகிறது.கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை புறவழி சாலைக்கு ஒரு மேம்பால சாலை அமைத்திருந்தால், நெரிசல் பிரச்னை தீர்க்கப்பட்டு இருக்கும்.அதே போல, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தரைதளம், முதல் தளத்தை மட்டும் பேருந்து நிலையத்துக்கு பயன்படுத்திக்கொண்டு, அதற்கு மேல் அடுக்குமாடி அலுவலக வளாகம், வாகன நிறுத்துமிடம் கட்ட திட்டமிட்டு இருக்கலாம். சி.எம்.டி.ஏ.,வில் உள்ள நகரமைப்பு வல்லுனர்களுக்கு இது தெரியாமல் போனது புதிராக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர் குழு -