உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பிரம்மோற்சவ திருத்தேர் திருவிழா கோலாகலம்

பிரம்மோற்சவ திருத்தேர் திருவிழா கோலாகலம்

சென்னை, திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், மாசி பிரம்மோற்சவ திருவிழா 15ம் தேதி துவங்கியது. முக்கிய நிகழ்வான திருத்தேர் உற்சவம், நேற்று காலை நடந்தது.ஆடி அசைந்து வந்த 41 அடி உயர திருத்தேரில், உற்சவர் சந்திரசேகரர் - மனோன்மணி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.ஆயிரக்கணக்கானோர் தேர் வடம் பிடிக்க, சிவனடியார்கள் திருப்புகழ் பாடியும், சிறுவர் - சிறுமியரின் கலை நிகழ்ச்சிகளுடனும் உற்சாகமாக தேர் வரவேற்கப்பட்டது. இன்று காலை குதிரை வாகனத்திலும், இரவு இந்திர விமானத்திலும், உற்சவர் எழுந்தருளி மாடவீதி உலா வருவார்.

வடம் பிடித்த பெண்கள்

 வண்ணாரப்பேட்டை, காமாட்சி அம்மன் கோவிலில் 20ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா, கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 19ம் தேதி பால்குடம் வீதி உலா நடந்தது. நேற்று திருத்தேர் விழா நடந்தது. பெண்கள் உட்பட நுாற்றுக்கணக்கானோர் வடம் பிடிக்க, 18 அடி திருத்தேர் சுற்றுவட்டார பகுதிகளில் வலம் வந்தது. 22ம் தேதி திருவிளக்கு பூஜையும்; 23ம் தேதி நுாற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்கும், பொங்கல் விழாவும் நடைபெற உள்ளது.

மாடவீதிகளில் பெருமாள்

 அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவிலில், பிரம்மோற்சவ விழா, 14ம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரதான நாளான நேற்று தேர்த் திருவிழா நடந்தது.உற்சவர் பத்மநாபர் ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன் சர்வ அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினார். காலை 7:00 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டது. மாடவீதிகளில் வலம் வந்த பெருமாள், காத்திருந்த பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தார்.இன்று குதிரை வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் அருள்பாலிக்கும் பெருமாளுக்கு, நாளை மாலை 3:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

மலையின் கீழ் முருகன்

 குன்றத்துார் முருகன் கோவிலில், 400 ஆண்டுகளுக்கு பின் பிப்., 15ம் தேதி, கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா துவங்கியது. திருத்தேரோட்டத்தை முன்னிட்டு, முருகனுக்கு நேற்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மலையின் மேல் இருந்து பல்லக்கில் மலையின் கீழ் வந்த முருகன், தேரில் பிரதான வீதிகளில் வலம் வந்தார்.திருத்தேர் பவனியை, திரளான மக்கள் கண்டுகளித்தனர். அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.--- நமது நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை