உட்லாண்ட்ஸ் ஹோட்டல் மீது ஒலி மாசு ஏற்படுத்துவதாக புகார்
சென்னை:மயிலாப்பூர், ராதாகிருஷ்ணன் சாலையில், 'உட்லாண்ட்ஸ்' ஹோட்டல் உள்ளது. இங்கு 'பிருந்தாவன், கிருஷ்ணா' என்ற பெயரில், இரண்டு ரெஸ்டாரென்ட் மட்டுமின்றி, திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த, மூன்று அரங்குகள் உள்ளன. இவை அனைத்தும், குளிர்சாதன வசதிகளுடன் கூடியவை.பல பத்தாண்டுகளுக்கும் முன் பொருத்தப்பட்ட இந்த குளிர்சாதனங்களே, தற்போதும் பயன்பாட்டில் உள்ளன. இவற்றை முறையாக பராமரிக்காததால், குளிர்சாதன இயந்திரம், பெரும் இரைச்சலுடன் இயங்குகிறது. இதனால், ஹோட்டல் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் வசிக்கும் வயதானோர், குழந்தைகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இரவில் பெரும் சத்தத்தால் உறங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். தவிர, உணவகத்திலிருந்து வெளியேற்றப்படும் புகையால், கண் எரிச்சலும் ஏற்படுகிறது. இது தொடர்பாக, ஹோட்டல் அமைந்துள்ள லட்சுமிபுரத்தில் வசிக்கும் மக்கள், சென்னை மாநகராட்சி கமிஷனரிடம் புகார் அளித்துள்ளனர்.அதில், 'ஒலி மாசு ஏற்படுத்தும் ஹோட்டலில் உரிய ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.