கட்டுமான அனுமதி பரிசீலனை சி.எம்.டி.ஏ.,வில் தினக்கூலிகள்?
சென்னை: சென்னையில், 10,000 சதுர அடிக்கு மேலான கட்டுமான திட்டங்களுக்கு ஒப்புதல் தரும் அதிகாரம், சி.எம்.டி.ஏ.,விடம் உள்ளது. இந்த பணிகள் ஆன்லைன் முறைக்கு மாறிவிட்டன. கட்டட அனுமதி கோருவோர், ஒற்றை சாளர முறையில் பதிவு செய்த ஆவணங்களை, திட்ட உதவியாளர்கள் சரிபார்ப்பர். பின், துணை திட்ட அதிகாரிகள் இறுதி செய்வர். இந்த பணியில் சில மாதங்களாக, தினக்கூலி பணியாளர்கள் ஈடுபடுத்தடுவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, கட்டட அமைப்பியல் பொறியாளர் பி.பாலமுருகன் கூறியதாவது: ஒற்றை சாளர முறை இணையதளத்தில், உயரதிகாரிகளிடம் இருக்க வேண்டிய கட்டுப்பாடு, தற்காலிக பணியாளர்களிடம் சென்றது சரியல்ல. அனுபவம் இல்லாத இவர்கள் அனுப்பும் கோப்புகளை, உயரதிகாரிகள் ஏற்று உத்தரவு பிறப்பிக்கும்போது, தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது. இந்த பிரச்னைக்கு, சி.எம்.டி.ஏ., தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.