| ADDED : ஜன 11, 2024 01:37 AM
அய்யப்பன்தாங்கல், பரணிபுத்துார் பிரதான சாலையில், சுடுகாட்டில் மீண்டும் குப்பை கொட்டப்பட்டு வருவதை தடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.அய்யப்பன்தாங்கல் ஊராட்சி மற்றும் பரணிபுத்துார் ஊராட்சி இடையே அய்யப்பன்தாங்கல், மவுன்ட் -- பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் மாங்காடு -- பட்டூர் சாலைகளை இணைக்கும் பரணிபுத்துார் பிரதான சாலை உள்ளது.இதில், செந்தமிழ் நகர் அருகே ஊராட்சி சுடுகாடு அமைந்துள்ளது. இந்த சுடுகாடு அருகே உள்ள நிலத்தில், சூளைக்காக மண் எடுக்கப்பட்டதால், பள்ளமாக மாறி உள்ளது.இங்கு தண்ணீர் தேங்கி வரும் நிலையில், அப்பகுதியில் பரணிபுத்துார் ஊராட்சி சார்பில் குப்பை கொட்டப்பட்டு வந்தது. இதனால், சுடுகாடு போதிய பராமரிப்பின்றி புதர் மண்டியதால், சுடுகாட்டை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.மேலும், இங்கு கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பை எரிக்கப்பட்டதால், பகுதி மக்கள் மூச்சு திணறலால் அவதிப்பட்டனர். மேலும், இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டதால், துர்நாற்றம் வீசியது.இதுகுறித்து நம் நாளிதழில் தொடர்ந்து செய்திகள் வெளிவந்தன. இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் அப்பகுதியை ஆய்வு செய்தனர்.மீண்டும் குப்பை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுத்ததுடன், குப்பை அகற்றப்பட்டன. அத்துடன் சாலையோரம் 'ஷீட்'டால் தடுப்புகள் அமைக்கப்பட்டன.ஆனால், தற்போது மீண்டும் பரணிபுத்துார் ஊராட்சி சார்பில், அங்கு குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.