உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை பணி ஆமை வேகத்தால் அதிருப்தி! 15 ஆண்டுகளாக திட்டத்தை முடிக்காமல் அலட்சியம்

தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை பணி ஆமை வேகத்தால் அதிருப்தி! 15 ஆண்டுகளாக திட்டத்தை முடிக்காமல் அலட்சியம்

தாம்பரம்: தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை திட்டம் 15 ஆண்டுகள் ஆகியும், 50 சதவீத பணிகள் கூட முடியாமல் இருப்பது, அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வாகன எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, திட்டத்தை வேகப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.தென் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள், பெருங்களத்துார், தாம்பரம் வழியாக சென்னைக்குள் நுழையாமல், மாற்றுப்பாதை வழியாக பெருங்களத்துார், சதானந்தபுரம், ராஜகீழ்ப்பாக்கம், வேளச்சேரி சாலை வழியாக செல்லும் வகையில், தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை என்ற திட்டம், 15 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

ஆறு வழிப்பாதை

பீர்க்கன்காரணை பழைய காவல் நிலையம் அருகே துவங்கி சதானந்தபுரம், ஆலப்பாக்கம், நெடுங்குன்றம், திருவஞ்சேரி, ராஜகீழ்ப்பாக்கம், சேலையூர் கிராமங்கள் வழியாக வேளச்சேரி சாலையை அடையும், ஆறு வழிப்பாதையான இச்சாலையின் நீளம் 9 கி.மீட்டர்., இத்திட்டத்தின் முதற்கட்டமாக, சேலையூர் முதல் திருவஞ்சேரி வரை, 3 கி.மீ., துாரத்திற்கு பணிகளை துவக்க, 2013ல் 27.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது. தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக, திருவஞ்சேரி முதல் மப்பேடு வரை, 1.4. கி.மீ., துாரத்திற்கு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியும் நடந்தது.சேலையூர் முதல் ராஜகீழ்ப்பாக்கம் வரை, ஆக்கிரமிப்புகளை அகற்ற வசதியாக, அந்த இடங்களை நெடுஞ்சாலைத் துறைக்கு மாற்றம் செய்து தரும்படி கோரப்பட்டது.

கோரிக்கை

கடந்த 2018ல், இத்திட்டத்திற்கு, 34 கோடி ரூபாய் அனுமதி வழங்கி, அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து, சதானந்தபுரம் முதல் திருவஞ்சேரி வரை, சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இடையில் ஓரிடத்தில் சாலைகளை இணைக்க வேண்டியுள்ளது.அடுத்ததாக, மப்பேடு புத்துாரில் பணிகள் துவக்கப்பட்டு நடந்து வருகின்றன. இதன் ஓரம், மழைநீர் கால்வாயை தொடர்ச்சியாக முடிக்கவில்லை; பாதி பாதியாகவே கட்டப்பட்டுள்ளன.அதேபோல், ராஜகீழ்ப்பாக்கம் பகுதியில் பணிகளை துவக்க வேண்டியுள்ளது. அது, எப்போது துவங்கும் என்பது தெரியவில்லை. இப்படியே போனால், இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆனாலும், இத்திட்டம் முடியாது என்றே தெரிகிறது.ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டு, 15 ஆண்டுகள் ஆகியும் முடியாமல் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, பணிகளை வேகப்படுத்தி, தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலையை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

பெருங்களத்துாரில் வேகம்

பெருங்களத்துார் ரயில் நிலையம் அருகில், மாநில நெடுஞ்சாலை - ரயில்வே நிர்வாகம் இணைந்து, 234 கோடி ரூபாய் செலவில், மேம்பாலம் கட்டும் பணி மேற்கொள்கின்றன.முதற்கட்டமாக ஜி.எஸ்.டி., சாலையில், செங்கல்பட்டு - தாம்பரம் மார்க்கமான ஒரு வழிப்பாதை, 2022 செப்டம்பர் மாதம் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. பின், ரயில்வே கேட் கடந்து செல்லும் சீனிவாசா நகர் பாதையும் திறக்கப்பட்டது.தொடர்ந்து, ஜி.எஸ்.டி., சாலையில், வண்டலுார் மார்க்கமான பணிகள் துவக்கப்பட்டன. 2024, மார்ச் மாதத்திற்குள் இப்பணிகளை முடிக்க திட்டமிட்டனர். ஆனால், திட்டமிட்டப்படி முடியவில்லை. அதேநேரத்தில், பணிகள் வேகமாக நடந்து வருவதால், விரைவில் அப்பாதை திறக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், நெடுங்குன்றம் சாலை மார்க்கமான பணிகளை துவக்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

subramanian suriyanarayanan
மே 06, 2024 10:34

இந்த கட்டுரை வெளியானதற்கு தினமலர் நாளிதழுக்கு நன்றி அதே சமயம் நீங்கள் இங்கே ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள சேலையூர் மப்பேடு வரையில் உள்ள புறவழி பாதையை பார்த்து இங்கு நிலவி வரும் அவலத்தை எழுத வேண்டும் சாலையின் இரு பக்கமும் குப்பைகள், துர்நாற்றம், வணிகர்களின் ஆக்கிரமிப்பு, மழை நீர், வடிகால் வழி சென்று போகாமல் சாலையில் தேங்கும் மழை வெள்ளம், நான்கு அரசு மது பான கடைகள், பொது மக்களுக்கு பெரும் தொந்தரவாக உள்ளன மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை