சென்னை: ''சென்னையில் மழைநீர் வடிகால்வாய் முக்கியமானது என்றாலும், நீரை வெளியேற்ற அவை மட்டுமே தீர்வாக இருக்காது,'' என, மாநகராட்சி துணை கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி கூறினார். சென்னை மாநகாட்சி சார்பில், வெள்ள தடுப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு, குடிநீர் ஆதாரம் உள்ளிட்டவற்றின் உட்கட்டமைப்பு பணிகள் குறித்து, நிருபர்கள் விளக்க கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. அதன்படி, வியாசர்பாடி பழைய கூட்செட் சாலையில், இரண்டு ஏக்கர் பரப்பளவில் ரயில்வே குளம் இருந்தது. அதன் அருகே இருந்த பகுதிகள் புதர்மண்டி இருந்தன. ரயில்வே துறையிடம் அனுமதி பெற்று, நீர்ப்பிடிப்பு இடத்தை, ஏழு ஏக்கராக உயர்த்தியதன் வாயிலாக, வியாசர்பாடி பகுதிகளில் வெள்ள பாதிப்பு தடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், கிண்டி ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆறு குளங்களில், 28.75 கோடி லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மாநகராட்சி துணை கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: சென்னையில் கடந்தாண்டு, 41 புதிய குளம் உருவாக்கப்பட்டது. இந்தாண்டு, 31 புதிய குளங்கள் உருவாக்கப்பட்டு, 47 குளங்கள் துார்வாரப்பட்டு உள்ளன. அதன்படி, நான்காண்டுகளில், 231 புதிய குளங்களை, மாநகராட்சி உருவாக்கி உள்ளது. இந்த குளங்கள் மழைக்காலத்தில் மழைநீரை வெளியேற்றும் பணிக்காக மட்டுமல்லாமல், நிலத்தடி நீர் மட்டத்தையும் அதிகரிக்க உதவியாக உள்ளது. கடந்தாண்டு, 87 இடங்களில் மழைநீர் தேங்கும் இடமாக அடையாளம் காணப்பட்டு, தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. சென்னையில், 60 சதவீதம் நிலப்பரப்புகள் கடல் மட்டத்திற்கு கீழ் உள்ளதால், மழைநீர் வெளியேற்றுவதற்கு சிக்கல் உள்ளது. மழைநீர் வெளியேற்றுவதற்கு மழைநீர் வடிகால்வாய் முக்கியமானது. ஆனால், மழைநீர் வடிகால்வாய் மட்டுமே தீர்வு கிடையாது. அதற்காக, புதிய குளங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல திட்டங்களையும் பயன்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.