சென்னை,சென்னை, திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அவரது பாட்டியுடன் வசித்து வந்தார். செங்கல்பட்டில் உள்ள ஒரு பள்ளி விடுதியில் தங்கி, ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த சிறுமி, 2021 பிப்., 11ம் தேதி, விடுமுறையில் பாட்டியை பார்க்க வந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த, 36 வயதான டிரைவர் ஒருவர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர், திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்படி, போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, டிரைவரை போலீசார் கைது செய்தனர்.இந்த வழக்கு, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலெட்சுமி முன் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு:குற்றம் சாட்டப்பட்டவர் மீது, சந்தேகத்திற்கு இடமின்றி, அரசு தரப்பால் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.எனவே, அவருக்கு அத்துமீறி நுழைந்த குற்றத்திற்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும், பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்கு ஆயுள் தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, 10 லட்சம் ரூபாயை, அரசு இழப்பீடாக வழங்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி தீர்ப்பளித்தார்.