| ADDED : டிச 06, 2025 05:28 AM
ஆவடி: ஆவடியில் வெள்ள பாதிப்பு எதிரொலியாக, 10க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆவடி அடுத்த பட்டாபிராம், கிழக்கு கோபாலபுரம் ஒன்று முதல் நான்காவது குறுக்கு தெரு, அப்துல் கலாம் தெரு வள்ளலார் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள, 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளைச் சுற்றி, 'டிட்வா' புயலால் மழை வெள்ளம் தேங்கி நிற்கிறது. இந்நிலையில், பட்டாபிராம், வள்ளலார் நகரில் உள்ள 600க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்து வெளியேறும் மழைநீர், ஆக்கிரமிப்பால் ஆங்காங்கே தேங்கி நின்றது. இதையடுத்து, நேற்று மதியம் ஆவடி மாநகராட்சி அதிகாரிகள், பட்டாபிராம் தெற்கு பஜாரில் உள்ள மழைநீர் வடிகாலை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கறிக்கடை, செருப்பு கடை, ஒரு காலி கடை என, 10க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, மழை நீர் வெளியேற வழிவகை செய்தனர். வடிகாலில் செல்லும் மழைநீர் தண்டுரை, மாங்குளம் தரைப்பாலம் வழியாக சித்தேரியில் கலக்கிறது. சித்தேரி ஏற்கனவே ஆக்கிரமிப்பில் இருப்பதால் கோபாலபுரம், தென்றல் நகரில் வெள்ள பாதிப்பு ஏற்படும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.