பெருங்களத்துார், பெருங்களத்துாரை அடுத்த ஆலப்பாக்கத்தில், நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, சாலையில் முதலைகள் நடமாடியதை பார்த்து, பீதியடைந்தனர். சமீபகாலமாக முதலை நடமாட்டம் அதிகரித்துள்ளதால், வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு முழுவதுமாக பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.வண்டலுார் உயிரியல் பூங்காவை ஒட்டியுள்ள சதானந்த புரம், நெடுங்குன்றம் ஏரிகள் உள்ளன. பூங்கா கூண்டுகளில் உலாவும் முதலை குட்டிகளை, பறவைகள் துாக்கி செல்லும் போது இந்த ஏரிகளில் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.இதனால், சதானந்தபுரம், நெடுங்குன்றம் ஏரிகளில் ஏகப்பட்ட முதலைகள் நடமாடுகின்றன. அவை அடிக்கடி ஏரிகளில் இருந்து வெளியேறி, குடியிருப்புகளிலும், சாலைகளிலும் நடமாடுவதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.டிச.,13ல் ஆலப்பாக்கம்- மப்பேடு சாலையில், சாலையோரம் 7 அடி முதலை படுத்திருந்தது. அதை வனத்துறையினர் பிடித்து சென்றனர். சில நாட்களுக்கு முன், ஆலப்பாக்கம அருகே 2.5 அடி முதலை குட்டி ஒன்று படுத்திருந்தது. அதையும் வனத்துறையினர் பிடித்து சென்றனர்.இந்த நிலையில், நேற்று முன்தினம், ஆலப்பாக்கம்- மப்பேடு சாலையில், சிலர் நடைபயிற்சி மேற் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு பெரிய முதலை, இரண்டு சிறிய முதலைகள் சாலையை கடந்து, அங்குள்ள கால்வாயில் சென்றது. இதைபார்த்து, அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.இத்தகவல், அப்பகுதி முழுவதும் பரவியதால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். சதானந்தபுரம், ஆலப்பாக்கம் பகுதிகளில் முதலை நடமாட்டம் அதிகரித்துள்ளதால், வனத்துறை அதிகாரிகள், அங்கு முகாமிட்டு, குடியிருப்பு, சாலை, கால்வாய்களில் சுற்றித் திரியும் முதலைகளை முழுவதுமாக பிடிக்க வேண்டும் என்று, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.