சென்னை
விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும்
அனைத்து 'இண்டிகோ' விமான சேவைகளும் நேற்று ரத்து செய்யப்பட்டன. மருத்துவம்
மற்றும் கல்விக்காக பயணம் மேற்கொள்ளவிருந்த பயணியர் கடுமையாக
பாதிக்கப்பட்டனர். இதனால், அதிருப்தியடைந்த 500க்கும் மேற்பட்டோர்
உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து
உள்நாடு, வெளிநாடுகளில் பயணம் செய்ய, தினமும் 55,000 பயணியர் வந்து
செல்கின்றனர். 'ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட்' உள்ளிட்ட விமான
நிறுவனங்கள் அதிகளவில் விமான சேவைகளை வழங்கி வருகின்றன. இதில்,
நாட்டில் 'மோனோபோலி' எனும் தனி ஆதிக்கம் செலுத்தி வரும் 'இண்டிகோ' விமான
நிறுவனம், கடந்த மூன்று நாட்களாக விமான சேவைகளை நிறைவேற்றுவதில் சொதப்பி
வருகிறது. சேவைகளில் பாதிப்பு மத்திய சிவில் விமான போக்குவரத்து
இயக்குநரகம் பிறப்பித்த புது விதிகளை காரணம் காட்டி, பல்வேறு விமான சேவைகளை
இண்டிகோ நிறுவனம் ரத்து செய்து வந்தது. நேற்றும்கூட ஏராளமான விமான சேவைகளை
ரத்து செய்தது.
Galleryசென்னையில் இருந்து டில்லி, மும்பை, ஹைதராபாத், கொல்கட்டா, கோவா,
ஆமதாபாத், புனே, பெங்களூரு, கொச்சி, உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும்
விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. டில்லி, மும்பை, கொல்கட்டா,
அந்தமான், செகந்திராபாத், ஹைதராபாத், குவஹாத்தி, புவனேஸ்வர், கோவா, புனே,
கொச்சி, கோவை, விசாகப்பட்டினம் மற்றும் இலங்கை ஆகிய இடங்களில் இருந்து,
சென்னைக்கு வரவேண்டிய 31 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. சில
இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் ஐந்து மணி நேரத்திற்கு மேல் தாமதமாக
புறப்பட்டன. நேற்று இரவு வரை, 150க்கும் மேற்பட்ட விமான சேவைகளில் பாதிப்பு
ஏற்பட்டது. இண்டிகோ நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடியால்,
சென்னை விமான நிலையத்தில் உள்ள அறிவிப்பு பலகைகளில், அந்நிறுவனத்தின் விமான
விபரங்கள் முழுதும் மறைக்கப்பட்டன. அதாவது 'அன்நவுன்' என
குறிப்பிடப்பட்டிருந்தன. பல்வேறு நகரங்களுக்கு பயணிக்க வந்த
நுாற்றுக்கணக்கான பயணியர், 'டி1' புறப்பாடு முனையத்திற்கு, நேற்று
முன்தினம் இரவு முதல் வரத்துவங்கினர். குற்றச்சாட்டு விமான
இயக்கம் தடைபட்டுள்ளதாக அந்நிறுவன ஊழியர்கள் அறிவித்ததும், ஆத்திரமடைந்த
500க்கும் மேற்பட்ட பயணியர், திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்கள், முதியோர், குழந்தைகள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு, 'ஏன் இப்படி எங்களை வதைக்கிறீர்கள். எத்தனை பேருக்கு முக்கிய வேலை இருக்கிறது என தெரியுமா' என கேள்வி
எழுப்பினர். விமானம் ரத்து செய்வதாக இருந்தால் முன்கூட்டியே தகவல்
அளித்திருக்கக்கூடாதா எனவும் குற்றம் சாட்டினர். மருத்துவ சேவை,
மாணவர்களின் கல்வி உள்ளிட்ட பல தேவைகளுக்காக, பல்வேறு நகரங்களுக்கு செல்ல
வேண்டிய கட்டாயம் இருப்பதாக, பயணியர் கதறியபோதும், அந்நிறுவன ஊழியர்களால்
கண்டுகொள்ளப்படவில்லை. மாறாக அவர்கள், விமான நிலைய போலீசாருக்கு
தகவல் அளித்தனர். போலீசார் வந்து பேச்சு நடத்தியதில், சிலர் ஏமாற்றத்துடன்
வீடு திரும்பினர். வாழ்வில் இது போன்ற கசப்பான அனுபவத்தை எங்கும்
பார்த்ததில்லை என, பயணியர் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். 'ரீபண்ட்' பெறலாம் இதற்கிடையே, ரத்து செய்யப்பட்ட இண்டிகோ விமானங்களில்,
டிக்கெட் முன்பதிவு செய்திருந்த பயணியர், 'ரீபண்ட்' எனும் டிக்கெட் தொகையை
திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என அந்நிறுவனம் அறிவித்தது. இதையடுத்து, விமான நிலையத்தில் உள்ள கவுன்டர்களில் பயணியர் கூட்டம்
அலைமோதியது. இருப்பினும் பலருக்கு ரீபண்ட் தொகை வழங்கப்படவில்லை. இதனால் அவதியடைந்த பயணியர் வேறுவழியின்றி திரும்பினர். ஒரு வாரத்திற்குள்
அனைவருக்கும் ரீபண்ட் வழங்கப்படும் என, இண்டிகோ நிறுவன உயர் அதிகாரிகள்
தெரிவித்தனர். நம்பிக்கையே போய்விட்டது!
வணிகம் தொடர்பாக டில்லி செல்ல திட்டமிட்டு, முன்பதிவு செய்து
காத்திருந்தேன். நேற்று வரை எந்த தகவலும் எனக்கு வரவில்லை. காலை, விமான
நிலையம் உள்ளே நுழைய முயன்றபோது என்னை தடுத்தனர். விமானங்கள் ரத்து
செய்யப்பட்டது எனக்கூறி அலைக்கழித்தனர். ஒரு மாதத்திற்கு முன்னரே டில்லி
செல்ல திட்டமிட்டும் என்னால் பயணம் செய்ய முடியவில்லை. ஏதேதோ காரணத்தை கூறி
எங்கள் பயணத்தை நிறுத்திவிட்டனர். பழைய நிலைக்கு திரும்பினாலும், இனி
இண்டிகோ விமானத்தில் செல்ல எனக்கு விருப்பம் இல்லை. - மனோகரன், 45, பயணி,
வில்லிவாக்கம்.
கூடுதல் பெட்டியுடன் ரயில் இயக்க வேண்டும் சமீப நாட்களாக, இந்தியாவில்
உள்நாட்டு விமான பயணம் என்பது கடினமானதாக மாறிவிட்டது. இண்டிகோ விமான
நிறுவனமும், மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகமும் எவ்வித
நெருக்கடி மேலாண்மை பணியையும் சரியாக செய்யாதது போல தெரிகிறது. அனைத்து
விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டதால், முதியவர்கள் மற்றும் மாணவர்கள்
மிகவும் தவித்தனர். இதுபோன்ற அவசர நேரங்களில், சிறப்பு ரயில்கள், கூடுதல்
பெட்டிகளுடன் அதிவிரைவு ரயில்களை இயக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
- ஜெயபிரகாஷ் காந்தி, கல்வியாளர், சென்னை.
வீடியோ அழைப்பில் மனைவியை பார்த்து கண்ணீர்விட்ட கணவர் வடமாநிலத்தைச்
சேர்ந்த ஆண் பயணி ஒருவர், வேலை காரணமாக, மூன்று நாட்களுக்கு முன் சென்னை
வந்தார். இவரின் மனைவிக்கு, புனேவில் இன்று அறுவை சிகிச்சை செய்ய
திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக 'இண்டிகோ' விமானத்தில் பயணிக்க டிக்கெட்
பதிவு செய்திருந்தார். அவர் பயணிக்கும் விமானம் ரத்தானதால், என்ன
செய்வதென்று தெரியாமல், மனைவியிடம் மொபைல் போனில் வீடியோ அழைப்பில் பேசி
அழுதார். இது, அங்கிருந்த மற்ற பயணியரையும் சோகத்தில்
ஆழ்த்தியது.
- நமது நிருபர் -