சென்னை: ஹரியானாவில் நடந்து வரும் தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில், தமிழக அணி சார்பில் போட்டியிட்ட சென்னை வீரர் - வீராங்கனையர் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். இந்திய டேபிள் டென்னிஸ் சங்கம் சார்பில், தேசிய அளவில் நான்காவது யூ.டி.டி., டேபிள் டென்னிஸ் தரவரிசை சாம்பியன்ஷிப் போட்டி, ஹரியானா மாநிலத்தின் பஞ்ச்குலாவில் நடந்து வருகிறது. இதில், தேசத்தின் அனைத்து மாநிலங்களிலிருந்தும், 3,000-க்கும் அதிகமான வீரர் - வீராங்கனையர், யு - 11, 13, 15, 17, 19 மற்றும் ஓபன் பிரிவுகளில், தங்களது தரவரிசையை உயர்த்துவதற்காக போட்டியிடுகின்றனர். அதில், தமிழகம் சார்பில், 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். மகளிருக்கான, 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீயா, இறுதிப்போட்டியில் பெங்களூரின் டாஸ் சின்ரியாவை எதிர்த்து மோதினார். இதில், ஸ்ரீயா 0 - 4 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். அடுத்து நடந்த பெண்கள் ஓபன் பிரிவு போட்டியில், சென்னையின் செலீனா தீப்தி வெண்கலப் பதக்கம் வென்றார். தொடர்ந்து, ஆடவருக்கான 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவின் இறுதிப்போட்டியில், சென்னையின் பாலமுருகன், அசாம் மாநிலத்தின் பட்டாச்சார்யாவிடம் 1 - 4 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து, வெள்ளிப் பதக்கம் பெற்றார். அதே பிரிவில், சென்னையின் மேகன் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.