சென்னை, கிளாம்பாக்கம் செல்ல பஸ்கள் மாறி, மாறி செல்ல வேண்டியுள்ளதால், ஒரு நாள் பஸ் பாஸ் மீண்டும் கொண்டுவர மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், 650 வழித்தடங்களில் 3,400க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் தினமும் 30.70 லட்சம் பேர் பயணிக்கின்றனர்.சென்னை மாநகர எல்லை விரிவாக்கத்தின் காரணமாக, புறநகர் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இந்நிலையில், கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் திறக்கப்பட்டுள்ளதால், மாநகர பேருந்துகளின் தேவை அதிகரித்து வருகிறது.அதேசமயம், கிளாம்பாக்கத்தில் இருந்து வடசென்னை பகுதிகளுக்கு செல்ல வேண்டுமென்றால், இரண்டு பேருந்துகள் பிடித்து மாற வேண்டிய நிலை உள்ளது.எனவே, 2018ம் ஆண்டில் நிறுத்தப்பட்ட ஒரு நாள் பஸ் பாஸ் திட்டத்தை, மீண்டும் கொண்டுவர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இது குறித்து, தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மைய தலைவர் சடகோபன் கூறியதாவது:கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் திறந்துள்ள நிலையில், வடசென்னை போன்ற நீண்ட துாரம் செல்ல வேண்டிய பயணியர், இரண்டு பேருந்துகள் மாறி செல்ல வேண்டிஉள்ளது.அதேபோல், பல்வேறு பணியின் காரணமாக, மெட்ரோ மற்றும் மின்சார ரயில்களிலும் பயணம் செய்ய வேண்டியுள்ளது.இதனால், மாநகர பேருந்துகளில் அடிக்கடி டிக்கெட் எடுப்பதால், பயணியரின் போக்குவரத்து செலவு அதிகரிக்கிறது.எனவே, மாநகர போக்குவரத்து கழகத்தில் ஒரு நாள் பாஸ் திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும். இதற்கான, கட்டணம் வேண்டுமென்றால், தற்போதுள்ள நிலைக்கு ஏற்றார்போல், மாற்றிக் கொள்ளலாம்.இந்த பாஸ் வந்தால், ஒரே நாளில் மூன்று அல்லது நான்கு பேருந்துகளில் மாறி செல்வோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார். இது தொடர்பாக மாநகர போக்குவரத்து அதிகாரிகளிடம் கேட்ட போது, 'மாநகர போக்குவரத்து கழகத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட 50 ரூபாய் ஒரு நாள் பாஸ் கட்டணம், 80 ரூபாய் ஆக மாற்றி நிர்ணயம் செய்யப்பட்டது.இருப்பினும், இந்த கட்டணம் குறித்து இறுதி முடிவு எடுக்கவில்லை. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறந்துள்ள நிலையில், இதற்கான தேவை அதிகரித்துள்ளதால், இந்த திட்டத்தை மீண்டும் கொண்டுவர பரிசீலித்து வருகிறோம்' என்றனர்.