சென்னை: வங்கி ஏ.டி.எம்., மையத்தில், பணம் செலுத்த சென்ற மளிகைக்கடைக்காரரிடம், அரிவாள் முனையில் 9 லட்சம் ரூபாய் பறித்து தப்ப முயன்றவர் கைது செய்யப்பட்டார். ராயப்பேட்டை, தேவராஜ் தெருவைச் சேர்ந்தவர் சையது முகமது, 31. இவர், ராயப்பேட்டை, முனியப்பா தெருவில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, மந்தைவெளி சிறுங்கேரி மடம் சாலையில் உள்ள ஐ.ஓ.பி., வங்கி ஏ.டி.எம்., மையத்தில், 9 லட்சம் ரூபாயை வங்கிக் கணக்கில் செலுத்த சென்றார். அப்போது, அங்கு வந்த மர்மநபர், அரிவாள் முனையில் அவரை மிரட்டி, 9 லட்சம் ரூபாய் இருந்த பையை பறித்து தப்ப முயன்றார். உடனே, அருகில் இருந்த மளிகைக்கடைக்காரர் கூச்சலிட்டு, பைக்கில் தப்ப முயன்றவரை பொதுமக்கள் உதவியுடன் மடக்கி பிடித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அபிராமபுரம் போலீசார் அவரிடம் விசாரித்ததில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியராஜன், 24, என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், 9 லட்சம் ரூபாய், அவர் பயன்படுத்திய 'பஜாஜ் பல்சர்' பைக், அரிவாள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.