| ADDED : ஜன 26, 2024 12:45 AM
திருவொற்றியூர், திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி - வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலின் உள்ளே பிரம்ம தீர்த்தம், வெளியே ஆதிஷேச தீர்த்த குளமும் உள்ளது.ஆண்டுதோறும், தைப்பூசத்தையொட்டி கோவில் வெளியேயுள்ள ஆதிஷேச தீர்த்த குளத்தில், தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.மழை இல்லாததால், சில ஆண்டுகள் தெப்பத் திருவிழா தடைப்பட்டும், நிலை தெப்பமாகவும் விழாவாகவும் நடந்தது. மிக்ஜாம் புயலின் போது வரலாறு காண மழை பெய்து, குளத்திற்கு நீர் வரத்து அதிகரித்தது. தற்போது, குளத்தின் 12 படிக்கட்டுகள் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் தேங்கியது. குளத்தில் 8 அடி உயரத்திற்கு தேங்கிய தண்ணீரில், தெப் போற்சவம் நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.அதன்படி, இன்று மாலை 6:00 மணிக்கு, தெப்பத்தில் உற்சவர் சந்திரசேகரர் உடனுறை திரிபுரசுந்தரி தாயார் எழுந்தருளி, ஆதிஷேச தீர்த்த குளத்தின் மைய மண்டபத்தை, ஐந்து முறை வலம் வரும் வைபவம் நடைபெற உள்ளது.இதற்காக, 77 டிரம்களை பயன்படுத்த, 20 அடி அகலம், 20 அடி நீளம் கொண்ட தெப்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. குளத்தில் படிந்திருக்கும் பாசிகளை அகற்றும் பணியும் நடந்து வருகிறது. தெப்பத் திருவிழா காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள வாய்ப்புள்ளதால், கோவில் உதவி கமிஷனர் சுப்பிரமணியம் தலைமையிலான கோவில் ஊழியர்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.