| ADDED : பிப் 10, 2024 12:08 AM
குரோம்பேட்டை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் உலகளாவிய அங்கீகாரம் பெற்ற குரோம்பேட்டை 'ரேலா' மருத்துவமனை, வங்கதேசம் நாட்டின், தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான 'ஷேக் பாசிலதுன்னெசா முஜிப்' நினைவு மருத்துவமனையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.இந்தியாவுக்கான வங்கதேச உயர் கமிஷனர் முஸ்தாபிசுர் ரஹ்மான், தமிழக சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, ரேலா மருத்துவமனை தலைவர் முகமது ரேலா, வங்கதேச மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரி முகமது தவுபிக் பின் இஸ்மாயில் ஆகியோர், இதற்கான ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டனர்.இந்த ஒப்பந்தத்தின் படி, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற ரேலா மருத்துவமனை, நவீன கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை திட்டம் தொடர்பாக, ஷேக் பாசிலதுன்னெசா முஜிப் நினைவு மருத்துவமனைக்கு பயிற்சி வழங்க உள்ளது.இது குறித்து முஸ்தாபிசுர் ரஹ்மான் கூறுகையில், ''வங்கதேசத்தில் கல்லீரல் தொடர்பான பாதிப்புகளால் அவதிப்படுவோருக்கு கிடைக்கும் சிகிச்சையின் தரத்தை மேம்படுத்த, இந்த ஒப்பந்தம் கைகொடுக்கும்,'' என்றார்.