| ADDED : டிச 25, 2025 05:26 AM
சென்னை: 'தொன்மை மாறாமல் புனரமைக்கப்பட்ட விக்டோரியா அரங்கை, பொதுமக்கள் நாளை முதல் கட்டணமின்றி பார்வையிடலாம்; அதற்கு முன்பதிவு அவசியம்' என, மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னையின் அடையாளமாக திகழும் விக்டோரியா அரங்கம், 32.62 கோடி ரூபாய் மதிப்பில், தொன்மை மாறாமல் புனரமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இதன் தரைதளத்தில் அரங்கம் கட்டுவதற்கு உதவிய ஆதரவாளர்கள், கட்டட கலைஞர், ஒப்பந்தாரர், இங்கு உரையாற்றிய தலைவர்கள், நீதிக்கட்சியின் எழுச்சி, நாடகமும் சினிமாவும், விளையாட்டுகளின் வரலாறு ஆகியவை அடங்கிய அருங்காட்சியகம் இடம் பெற்றுள்ளது. வெளிப்புற பகுதியில் டிராம் வண்டி, தொல்லியல் காட்சி பகுதி அமைக்கப்பட்டுள்ளன. இதுபோன்று பழைய சென்னை மாநகரின் நினைவுகளை உயிர்பிக்கும் விக்டோரியா அரங்கை பொதுமக்கள் நாளை முதல் பார்வையிடலாம். அதன்படி, https://chennaicorporation.gov.in/gcc/ என்ற இணையளதளத்தில், விக்டோரியா பொது அரங்கம் என்பதை தேர்வு செய்து, முன்பதிவு செய்து பார்வையிடலாம். முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே பார்வையிட அனுமதிக்கப்படுவர். அதன்படி காலை 8:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை, ஒவ்வொரு 1.30 மணி நேர இடைவெளியிலும் அதிகபட்சமாக, 60 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அதேபோல், கலை அரங்கமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. இதை ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்து, கலை, பொதுவான நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.