| ADDED : நவ 17, 2025 03:26 AM
சென்னை: இரவு பணி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த காவலாளி, மாடு முட்டியதில் பலத்த காயமடைந்தார். அமைந்தகரை, அய்யாவு காலனி, இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் எல்லையப்பன், 70; அமைந்தகரை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கார் ஷோரூமில் காவலாளியாக பணிபுரிகிறார். இரவு பணி முடிந்து, நேற்று காலை 7:00 மணியளவில், பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். சாலையோரத்தில் ஏராளமான மாடுகள் கூட்டமாக சென்றன. அதில் ஒரு மாடு, திடீரென ஓடிவந்து, எல்லையப்பனை முட்டி தள்ளியது. இதில், துாக்கி வீசப்பட்டு காயமடைந்த எல்லையப்பனை, அங்கிருந்தோர் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பலத்த காயம் ஏற்பட்ட அவருக்கு, வலது கால் தொடையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அமைந்தகரை போலீசார் விசாரிக்கின்றனர்.