உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிண்டி ரேஸ் கிளப்பில் பசுமை பூங்கா விவகாரம் ஐகோர்ட்டை அணுக சுப்ரீம் கோர்ட் உத்தரவு

கிண்டி ரேஸ் கிளப்பில் பசுமை பூங்கா விவகாரம் ஐகோர்ட்டை அணுக சுப்ரீம் கோர்ட் உத்தரவு

சென்னை, 'ரேஸ் கிளப்' பசுமை பூங்கா விவகாரத்தில், எந்த கோரிக்கையாக இருந்தாலும், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகும்படி, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 'சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் உள்ள மைதானத்தில், பசுமை பூங்கா உள்ளிட்ட பணிகளை, தமிழக அரசு தொடர்ந்து மேற்கொள்ளலாம்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதற்கு எதிராக, சென்னை ரேஸ் கிளப் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நரசிம்மா, மகாதேவன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், ''தற்போது பருவமழை பெய்யும் காலம் என்பதால், குறிப்பிட்ட இடத்தில் குளம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதை செய்யவில்லை என்றால் வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகள் தண்ணீரில் மூழ்கி விடும். எனவே, தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கக் கூடாது,'' என, வாதிட்டார். அப்போது பேசிய நீதிபதிகள், 'பசுமை பூங்கா மற்றும் நீர்நிலை அமைக்கக்கூடிய இடத்தில், வேறு எந்த கட்டுமானங்களையும் நிரந்தரமாக அமைக்க கூடாது என்பதை மட்டும் நாங்கள் அறிவுறுத்துகிறோம்' என, தெளிவுப்படுத்தினர். அப்போது, மூத்த வழக்கறிஞர் வில்சன், ''அந்தப் பகுதியில் நீர்நிலை அமைக்கும்போது கடும் மழை பொழிவு ஏற்பட்டால், அதை கண்காணிக்க சில கட்டுமானங்கள் தேவை. அதற்கு எந்த தடையும் விதிக்கக் கூடாது,'' என்றார். அதற்கு பதில் அளித்த நீதிபதிகள், 'இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், நாங்கள் தலையிட விரும்பவில்லை. 'யாருக்கேனும் ஏதேனும் கோரிக்கை இருந்தால், சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடலாம். அதே நேரத்தில் இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விரைவாக விசாரித்து முடிக்க உத்தர விடுகிறோம்' என்றனர். - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை