உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குச்சிப்புடியில் ரசிகர்களின் மனதை மூழ்கடித்த தம்பதி

குச்சிப்புடியில் ரசிகர்களின் மனதை மூழ்கடித்த தம்பதி

பாரம்பரிய உருப்படியோடு, கஜமுகனை வணங்கி 'இடதகதரிகிடதோம்' ஜதிகளுடன் மேடையில் நிகழ்ச்சியை துவங்கினர், நாட்டிய கலைஞர்கள் பத்மவாணி மற்றும் ஜெயகிஷோர் தம்பதி.குச்சிப்புடியான இந்நிகழ்ச்சியை, 'பரி பரினே பாதமே' பாடலோடு கீதமும், வாத்தியமும், நாட்டியமும் என ஆரம்பித்தனர்.அம்பிகையின் ரூபத்தை, 'அகார உகார மகார வடிவோடு இணைந்து பீடத்தில் வீற்றிருப்பவளே, சிவனேசனின் பிரியமானவளே உன் பாதங்களை போற்றிட' என ஸ்லோகம் அமைய, அம்மா ஆனந்ததாயினி வர்ணத்தை, இருவரும் ஒன்றிணைந்து நேர்த்தியாக ஆடினர்.இருவரும் மாறி மாறி ஆடி, தரங்கத்தை நிகழ்த்தினர். ஸ்வரமும், அடவுகளும், சிவே வார்த்தையோடு இணைய, அற்புதமாக நிகழ்ந்தது குச்சிப்புடியின் தரங்கம்.ஆனந்த தாயினியே நித்ய சொரூபிணியை காண்பிக்க, அடுத்த உருப்படி ஆரம்பித்தது. மேலுகோ சிருங்கார ராயா என்ற உருப்படியை, பத்மவாணி தனி நடனமாக வழங்கினார். இதில், கோபியர்களோடு கண்ணன் விளையாடியதும், லீலைகள் புரிந்ததும் பற்றி, நடனத்தில் தெளிவாக விளக்கினார்.தொடர்ந்து, முத்துகுமார் குழல் இசை பின்னணியில் ஒலிக்க, ஜெயதேவருடைய அஷ்டபதியோடு அரங்கில் நுழைந்தார் ஜெயகிஷோர்.'இசை வரும் திசை தேடித் தேடி செல்கிறேன், உறங்க முடியவில்லை. என் கண்முன்னே மயில்பீலியும், அதனோடு இருக்கும் கேசமும் உன் அழகு உருவமுமே எனக்கு தெரிகிறது' என்பதை விளக்கும் வகையில், அவரது நடனம் இருந்தது. கதனகுதுாகல ராகத்தோடு, குச்சிப்புடி நடனத்தின் வழியே குதுாகலம் புகுத்த, மேடை முழுதும் பறந்து விரிந்து ஆடி, மங்களத்துடன் அனைவருக்கும் வணக்கம் கூறி, நடன தம்பதி விடைபெற்றனர்.ஆஜித் நாராயணன் நட்டுவாங்கமும், பரத்வாஜ் மிருதங்கமும், அஞ்சனி வீணையும், அஜீஸ் பாடலும், புல்லாங்குழல் முத்துகுமாரும் சேர்ந்து நிகழ்த்திய ஆர்ப்பரிப்பு, ரசிகர்களின் மனதை மூழ்கடிக்கச் செய்தது.- மா.அன்புக்கரசி,மாணவி, தமிழ்நாடு கவின் கலை மற்றும் இசை பல்கலை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ