உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பணம் கொடுப்பதை தடுக்காமல் தேர்தல் பிரிவினர் வேடிக்கை!ஓட்டுக்கு வீடு வீடாக கட்சியினர் பணம் பட்டுவாடா

பணம் கொடுப்பதை தடுக்காமல் தேர்தல் பிரிவினர் வேடிக்கை!ஓட்டுக்கு வீடு வீடாக கட்சியினர் பணம் பட்டுவாடா

கோவை;கோவை லோக்சபா தொகுதியில், அரசியல் கட்சியினர் ஆங்காங்கே, வீடு வீடாகச் சென்று ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்கின்றனர். இதை தடுக்காமல், தேர்தல் பிரிவு அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றனர்.கோவை லோக்சபா தொகுதியில், பாரதிய ஜனதா - தி.மு.க., - அ.தி.மு.க., இடையே போட்டி காணப்படுகிறது. அதிலும், பா.ஜ.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் இடையே போட்டி கடுமையாகி இருக்கிறது. பா.ஜ.,வை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில், தி.மு.க.,வினரும், அ.தி.மு.க.,வினரும் ஆளுக்கொரு திசையில் வீடு வீடாகச் சென்று ஓட்டுக்கு பணம் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றனர். பணம் பட்டுவாடா வெளிப்படையாகவே நடப்பதால், நடுநிலை வாக்காளர்கள் அதிருப்தி அடைந்திருக்கின்றனர்.

பணம் பட்டுவாடா

தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பினால், பறக்கும் படை அதிகாரிகள் வருவதற்குள், பட்டுவாடாவை முடித்து விட்டு, இன்னொரு பகுதிக்கு கட்சியினர் சென்று விடுகின்றனர். ரேஸ்கோர்ஸ், ராமநாதபுரம், கோட்டைமேடு, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பணம் பட்டுவாடா முடிந்து விட்டது. அ.தி.மு.க.,. தரப்பில் இருந்து ஒரு ஓட்டுக்கு ரூ.250 - 300 வழங்கப்படுகிறது. தி.மு.க., தரப்பில் ரூ.500 வழங்கப்படுகிறது. முதல்முறை மற்றும் இளைஞர்களாக இருப்பின், ரூ.1,000 வரை வழங்கப்படுகிறது.

போலீசார் கண்டுகொள்வதில்லை

இரவு, 7:00 மணிக்கு பின், மின் வினியோகத்தை தடை செய்து விட்டு, பட்டுவாடா செய்வதாக, புகார் எழுந்துள்ளது. ஏரியா வாரியாக வாக்காளர் பட்டியல் வைத்துக் கொண்டு, ஒவ்வொரு வீடாக கணக்கீடு செய்து, எந்தெந்த வாக்காளர் என தெரிந்துகொண்டு, பணம் கொடுக்கின்றனர். இவற்றை தடுக்காமல், தேர்தல் பிரிவு அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றனர். இதுபோன்ற புகார்கள் வந்தாலும், போலீசார் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.பொதுமக்கள் கூறுகையில், 'கடை வீதிக்கு பொருட்கள் வாங்கச் சென்ற பொதுமக்களின் வாகனங்கள் மற்றும் வியாபார நோக்கில் மளிகை பொருட்கள் கொள்முதல் செய்யச் சென்ற வியாபாரிகளின் வாகனங்களை வழிமறித்து சோதனை செய்து, பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள், அரசியல் கட்சியினர் வீடு வீடாகச் சென்று பணம் வழங்குவதை தடுப்பதில்லை' என்றனர்.

பணம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம்

தேர்தல் பிரிவினர் கூறுகையில், 'ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் குற்றம்; பணம் வாங்குவதும் குற்றம். இதுதொடர்பாக வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இருந்தாலும், சில பகுதிகளில் அரசியல் கட்சியினர் பணம் வினியோகிப்பதாக புகார் வருகிறது. வீடியோ ஆதாரத்துடன் பொதுமக்கள் கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் முழுவீச்சில் கண்காணிப்பு பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை