| ADDED : மே 16, 2024 02:07 AM
கோவை:தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு புதிய விதிகள் கடந்த, 2023ம் ஆண்டு ஏப்., 13 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதில், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பதவி உயர்வு உள்ளிட்ட மாற்றங்கள் பணி விதிகளில் செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் - திருத்தம், சட்டம், 2022 மற்றும் அதன் விதிகள், 2023ம் ஆண்டு பணியமைப்பு தொடர்பான விதிகளில் திருத்தங்கள் மற்றும் கூடுதலாக விதிகள் சேர்க்குமாறு மாநிலம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி அலுவலர்கள், அமைச்சு பணியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இதையடுத்து, மாநிலம் முழுவதும் கருத்து கேட்டு நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அனைத்து மாநகராட்சி, நகராட்சி பணியாளர்கள் சங்கம், கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் வரும், 23ம் தேதி காலை, 11:00 மணிக்கு நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார்.ஒரு சங்கத்துக்கு இரண்டு பிரதிநிதிகள் மட்டும் பங்கேற்று ஆலோசனைகள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில், பணி மாறுதல், பதவி உயர்வில் உள்ள முரண்பாடுகள் குறித்த கருத்துகளை சங்க பிரதிநிதிகள் முன்வைக்க உள்ளனர்.