உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாக்காளர் பூத் சிலிப் வைத்திருந்தால் மட்டுமே ஓட்டளிக்க முடியாது:அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பில் தகவல்

வாக்காளர் பூத் சிலிப் வைத்திருந்தால் மட்டுமே ஓட்டளிக்க முடியாது:அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பில் தகவல்

பெ.நா.பாளையம்:வாக்காளர் ஒருவர் 'பூத் சிலிப்' மட்டுமே கொண்டு ஓட்டளிக்க முடியாது. அவர்கள் தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள, 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றைக் காட்டி ஓட்டளிக்கலாம். அனுமதிக்கப்பட்ட எந்த ஒரு ஆவணமும் இல்லாமல், வாக்காளர் வாக்களிக்கவோ, வரிசையில் நிற்கவோ, அனுமதி கிடையாது.துடியலூர் அருகே கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரியில் கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதி ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு நடந்தது. உண்மையான வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கும் போது, கட்டுப்பாட்டு கருவியோ அல்லது வாக்குப்பதிவு செய்யும் கருவியோ பழுதடைந்தால், கட்டுப்பாட்டு கருவி, ஓட்டுப்பதிவு செய்யும் கருவி, விவி பேட் என, அனைத்தையும் மாற்ற வேண்டும் என, ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி முகாமில் அறிவுரை வழங்கப்பட்டது.ஓட்டுப்பதிவின்போது ஓட்டுப்பதிவு அலுவலர்கள் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து அதிகாரிகள் விளக்கினர். வாக்குப்பதிவு நாளன்று காலையில் வாக்குப்பதிவு துவங்குவதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்னரே வாக்குப்பதிவு இயந்திரங்களை அவற்றுக்கான பெட்டிகளில் இருந்து வெளியே எடுத்து, அவற்றுக்குரிய கேபிள்களை கொண்டு முறைப்படி, பொருத்த வேண்டும்.வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்த வேண்டும். வாக்குப்பதிவு துவங்கிய பின்னர், வரிசையில் நிற்கும் ஆண், பெண் இருபாலரும் ஒருவர் பின் ஒருவராக வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். கருவுற்று இருக்கின்ற தாய்மார்கள், வயது முதிர்ந்தோர், இயலாதோர், உதவியாளருடன் வாக்களிக்க வந்தவர்கள், கண் பார்வை அற்றவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் வரிசையில் நிற்காமல், நேரடியாக வந்து வாக்களிக்கலாம். மாலை வாக்குப்பதிவு முடிவடைவதற்கு கடைசி இரண்டு மணி நேரத்தில், முகவர்களை மாற்ற அனுமதிக்க கூடாது.ஓட்டுச்சாவடியில் ஓட்டு பதிவு முடிவடைந்த நேரத்தில், வாக்காளர்கள் வரிசையில் நின்றிருந்தால், எத்தனை நபர்கள் நிற்கிறார்களோ, அவர்களுக்கு தலைமை அலுவலரின் முழு கையொப்பமிட்ட டோக்கன் வழங்க வேண்டும். டோக்கன் கொடுத்த பின்பு, வாக்களிக்க வரும் எவரையும் வரிசையில் அனுமதிக்க கூடாது. வாக்குப்பதிவு நேரம் முடிவடைந்தாலும் டோக்கன் வழங்கப்பட்ட அனைத்து வாக்காளர்களுக்கும், வாக்களிக்கும் வரை ஓட்டுப்பதிவினை தொடர்ந்து நடத்த வேண்டும். கள்ள ஓட்டு போட முயற்சி செய்து நிரூபிக்கப்பட்டால், அவரை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கப்பட்டன.

தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட ஆவணங்கள்

இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இல்லாமல், பூத் சிலிப்புடன், பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ், மத்திய, மாநில அரசுகளின் பொது துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள், புகைப்படத்துடன் கூடிய வங்கி கணக்கு, அஞ்சலக கணக்கு புத்தகங்கள், பான் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட அடையாள அட்டை, தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், லோக்சபா, சட்டசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை கொண்டு ஓட்டளிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ