கோவை:புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வதோடு, விவசாய வேலைகளை எளிதாக்கும் கருவிகளை அறிய முடிந்தது' என, அக்ரி இன்டெக்ஸ் கண்காட்சிக்கு வருகை தந்த விவசாயிகள் கருத்து தெரிவித்தனர்.கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் அக்ரிஇன்டெக்ஸ் 2024 கண்காட்சி, நேற்று நிறைவு பெற்றது. ஐந்து நாட்கள் நடந்த கண்காட்சியை, ஒன்றரை லட்சம் பேர் பார்வையிட்டனர். 'வர்த்தக விசாரணை திருப்தி'
கண்காட்சியில் அரங்கு அமைத்திருந்த, லுாதியானாவை சேர்ந்த அமர் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அரவிந்தர் சிங், ''இரண்டாவது ஆண்டாக அக்ரிஇன்டெக்ஸ் கண்காட்சியில் பங்கேற்கிறோம். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு, நல்ல வர்த்தக விசாரணைகள் இருந்தன. கோவையில் எங்களுக்கு டீலர்ஷிப் ஒன்றும் கிடைத்துள்ளது. கண்காட்சியில் கிடைத்த ஆர்டர்களை, வணிகமாக மாற்ற இந்த டீலர்ஷிப் உதவும். தொடர்ந்து அடுத்த ஆண்டும் பங்கேற்க உள்ளோம்,'' என்றார். 'விவசாயிகளுக்கான கண்காட்சி'
வேளாண்மை பால்பண்ணைக்கான உபபொருட்கள் விற்பனை அரங்கை அமைத்திருந்த ஈரோடு, கமலன் குட்டையை சேர்ந்த ராஜபூபதி கூறுகையில், ''விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள கண்காட்சி. கடினமான வேலைகளை செய்யும் அவர்களுக்கு, தானியங்கி இயந்திரங்கள் கை கொடுத்து வருகின்றன. கண்காட்சியில் வர்த்தக விசாரணைகள் நன்றாகவே இருந்தன,'' என்றார். 'அரிய தொழில்நுட்பம் அறிந்தோம்'
வேலந்தாவளத்தை சேர்ந்த விவசாயி ரங்கநாதன், ''அரிய பல தொழில்நுட்பங்களை இங்கு தெரிந்து கொள்ள முடிந்தது. படிப்பறிவு இல்லாதவர்களும் நேரடியாக கருவிகளை பார்த்து, தெரிந்து கொண்டனர். ஆள் பற்றாக்குறையை சமாளிக்க மட்டுமல்ல, எந்த ஒரு வேலையையும் எளிதாக செய்யவும், இங்குள்ள தொழில்நுட்பங்கள் உதவுகின்றன,'' என்றார். 'ஒவ்வொரு முறையும் புதுமை'
நெகமம் அருகே உள்ள சந்திராபுரத்தை சேர்ந்த விவசாயி துரைசாமி, ''விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள கண்காட்சியாக உள்ளது. மொபைல் போன் உதவியால், பல்வேறு பணிகளை செய்ய முடிகிறது. 50 ஏக்கர் விவசாயம் இருந்தாலும், 5 ஏக்கர் இருந்தாலும் ஒருவரே நீர்ப்பாசனம் செய்ய முடியும். விவசாயத்தில் தொழில்நுட்பங்கள் வளர்ச்சியால், ஆள் பற்றாக்குறையை சமாளிக்க முடியும். ஒவ்வொரு அக்ரிஇன்டெக்ஸ் கண்காட்சியிலும், ஏதாவது ஒரு புதுமையான விஷயங்களை பார்க்க முடிகிறது,'' என்றார்.
வர்த்தக விசாரணை!
'அக்ரிஇன்டெக்ஸ் 2024' கண்காட்சியின் தலைவர் தினேஷ்குமார் கூறுகையில், ''அக்ரிஇன்டெக்ஸ் -2024 கண்காட்சி எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தந்துள்ளது. டிராக்டர் நிறுவனங்கள், கனரக வேளாண் தொழில் இயந்திரங்கள் விற்பனையும், விசாரணையும் நன்றாக உள்ளது. இங்கு பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தாலும், புக்கிங் நன்றாகவே உள்ளது.ஒன்றரை லட்சம் பார்வையாளர்களை எதிர்பார்த்தோம். அந்த அளவை எட்டி விட்டோம். நர்சரி, சிறிய உபகரணங்கள் உள்ளிட்டவை விவசாயிகளை கவர்ந்துள்ளன. 150 கோடி ரூபாய்க்கும் மேல் வர்த்தக விசாரணைகள் இருக்கும் என மதிப்பீடு செய்துள்ளோம்,'' என்றார்.