| ADDED : ஜூலை 31, 2024 02:24 AM
மேட்டுப்பாளையம்;காரமடை அருகே தேக்கம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் செல்வராஜ் என்பவர் உதவியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 7 ஆண்டுகளாக செல்வராஜுக்கு இ.எஸ்.ஐ. பிடிக்கப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி, செல்வராஜ் பணிபுரியும் போது, திடீரென தொடர்ந்து வாந்தி எடுத்தார். அவருக்கு, முதலுதவி அளித்த பிறகு, சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் டிசம்பர் 9ம் தேதி அதிகாலை மாரடைப்பால் காலமானார். செல்வராஜ்,பணியின் போது இந்த சம்பவம் ஏற்பட்டதாலும், இ.எஸ்.ஐ. திட்டத்தின் கீழ் காப்பீட்டாளராக இருந்ததாலும், இ.எஸ்.ஐ. கார்ப்பரேஷன் நிறுவனம் மறைந்த செல்வராஜ் குடும்பத்திற்கு உதவி பயன் வழங்கியது. அதன் படி மறைந்த செல்வராஜின் மனைவி அம்சவேணிக்கு மாதம்தோறும் சார்ந்தோருக்கான உதவி தொகை ரூ.11,774 பெற ஆணை நேற்று வழங்கப்பட்டது.கோவை சார் மண்டல துணை இயக்குனர் இசக்கி சிவா, மேட்டுப்பாளையம் கிளை மேலாளர் ஸ்ரீராஜ் சிவசங்கர் ஆகியோர் செல்வராஜ் குடும்பத்திற்கு அனுமதி ஆணை மற்றும் ரூ.77,840 உதவி தொகையை வழங்கினர்.