| ADDED : ஆக 16, 2024 08:39 PM
கோவை;கொல்கத்தா போன்று தமிழகத்தில் நடந்து விடக்கூடாது என, பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் குற்றஞ்சாட்டினார்.கோவை அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி டாக்டரிடம், வாலிபர் ஒருவர் தவறாக நடக்க முயன்ற சம்பவத்தையடுத்து, பயிற்சி டாக்டர்களுக்கு ஆதரவாக, பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், கோவை அரசு மருத்துவமனை ஆர்.எம்.ஓ., சரவண பிரியாவை சந்தித்து பேசினார். பின் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:கோவையில் நடைபெற்ற சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்தது போன்று, தமிழகத்தில் நடந்து விடக்கூடாது. கோவை அரசு மருத்துவமனையில், பாதுகாப்புக்கான எந்த வசதிகளும் இல்லை. அடிப்படை வசதிகளும் கேள்விக்குறியாக உள்ளது. டாக்டர்களுக்கு கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை.டாக்டர்களின் தேவைகளை கேட்டறிந்து, உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்கள் எங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.