கோவை: மாநகராட்சி கட்டண கழிப்பிடத்தில், அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.கோவையின் பழமையான பஸ் ஸ்டாண்டுகளில், ஒன்று, காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம். கடந்த 1974ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பஸ் ஸ்டாண்டில் இருந்து, தற்போது திருப்பூர், ஈரோடு, சேலம், கோபி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், ஓசூர், கிருஷ்ணகிரி, காங்கேயம், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு, அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இங்கு வந்து செல்லும் பயணிகளின் வசதிக்காக, மாநகராட்சி சார்பில் கட்டணக்கழிப்பிடம் ஒப்பந்த முறையில் இயக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி சார்பில், ரூ.2, ரூ.3 மற்றும் ரூ.5 என்ற அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு பலகையும் வைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இங்கு மாநகராட்சி நிர்ணயித்த கட்டணம் வசூலிக்கப்படாமல், அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வெளியூர், வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் இங்கு சென்றால் அவர்களுக்கு தனிக்கட்டணம்(ரூ.15 -ரூ.20) வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து யாராவது கேள்வி எழுப்பினால், அவர்களை மரியாதை குறைவான வார்த்தைகளால், வசைபாடுவதும் நடக்கிறது. இதைத்தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மாநகராட்சி கட்டண கழிப்பிடங்களில், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக கட்டண வசூல் செய்வது குறித்து புகார் வரவில்லை. புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.-சிவகுரு பிரபாகரன்மாநகராட்சி கமிஷனர்