| ADDED : ஜூலை 08, 2024 03:54 AM
பல்லடம் : பல்வேறு வண்ணங்களில் சந்தையில் உலா வரும் மாத்திரை வடிவிலான மிட்டாய்கள் குழந்தைகளைக் கவர்ந்திழுக்கின்றன.குழந்தைகளை எளிதில் கவர்பவை மிட்டாய்கள். சில மாதங்கள் முன், ஊசி வடிவ போதை சாக்லேட்கள் விற்பனை, தமிழகம் முழுவதும் சக்கைப்போடு போட்டது. 'தினமலர்' நாளிதழ் இதை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது. தமிழகம் முழுவதும் ஆய்வு செய்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், ஊசி வடிவ போதை சாக்லேட்டுகளை பறிமுதல் செய்து அழித்தனர்.தற்போது, மாத்திரை வடிவிலான பல்வேறு வண்ணங்களிலான மிட்டாய்கள், அதிகளவில் விற்பனைக்கு வருகின்றன. திருப்பூர் மாவட்டம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனையாகும் இந்த மிட்டாய்கள், குழந்தைகளைப் பெரிதும் கவர்கின்றன. வீட்டில் பெரியவர்கள் பயன்படுத்தும் மாத்திரைகளையும் மிட்டாய் என்று கருதி குழந்தைகள் சாப்பிடும் அபாயமும் உள்ளது. விதிமுறைப்படி தயாரிக்கப்படாத இந்த மிட்டாய்கள், உடலுக்கு அபாயம் விளைவிக்கக்கூடியவையாகவும் உள்ளன.பல்லடம் தாலுகா உணவு பாதுகாப்பு துறை வட்டார அலுவலர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், 'உணவுப்பொருள் பாதுகாப்பு சட்டத்தின்படி, உணவுப் பொருட்கள் பேக்கிங் செய்வதற்கென சில விதிமுறைகள் உள்ளன. அதன்படி தான் அவற்றை பேக்கிங் செய்ய வேண்டும். வெளி மாநிலங்களில் இருந்து சான்று பெற்று இங்கு விற்பனைக்கு வரும் உணவு பொருட்களை விற்பனை செய்யும் டீலர்கள், ஏஜென்சிகள் உரிய முன் அனுமதி பெற வேண்டும். விதிமுறைப்படி தயாரிக்காத, உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் மிட்டாய்களை பறிமுதல் செய்து நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்'' என்றார்.