தொழிலாளி தற்கொலை
மகளுக்கு திருமணமாக இருந்த நிலையில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.கோவை சித்தாபுதுார் ஹரிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை, 56, கட்டட தொழிலாளி. இவருக்கு மது பழக்கம் இருந்து வந்தது. இதனால் அண்ணாதுரைக்கும், அவரது மனைவி ஜானகிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் அண்ணாதுரையின் மகளுக்கு திருமண ஏற்பாடுகள் வீட்டில் நடந்து வந்தது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன் அண்ணாதுரை மது போதையில் வீட்டிற்கு வந்தார்.இதனால் அண்ணாதுரைக்கும், அவரது மனைவிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அவர், மனைவியிடம் கோபித்துக் கொண்டு பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள தனக்கு சொந்தமான மற்றொரு வீட்டிற்கு சென்றார். அங்கு மனவேதனை அடைந்த அண்ணாதுரை துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். மகளுக்கு திருமணமாக இருந்த நிலையில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. --பயணியின் நகை மாயம்
கோவை மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல், 54; இவர் காரைக்குடியில் இருந்து அரசு பஸ்சில் கோவை வந்தார். உக்கடம் பஸ் நிலையத்தில் இறங்கி நின்ற போது அவரது கையில் அணிந்திருந்த, 7 பவுன் தங்க நகை காணாமல் போயிருந்தது. தங்கவேல் புகாரின் படி உக்கடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கத்தியை காட்டி பணம் பறித்தவர் கைது
புதுக்கோட்டை மாவட்டம் மேலப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 28; கோவை சித்தாபுது£ரில் தங்கியிருந்து தள்ளுவண்டியில் நிலக்கடலை வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் ராஜ்குமார் தனது நண்பர் ஒருவருடன் வடகோவை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நடந்த சென்றார். அப்போது அவரை வழிமறித்த நபர் ஒருவர் மது குடிக்க பணம் கேட்டார். அதற்கு ராஜ்குமார் தன்னிடம் பணம் இல்லை என்றார். உடனே அந்த நபர் கத்தியை காட்டி மிரட்டி ராஜ்குமார் வைத்திருந்த ரூ.200 பறித்து தப்பி சென்றார். ராஜ்குமார் புகாரின் படி காட்டூர் போலீசார் வழக்கு பதிந்து பணம் பறித்த பேரூரை சேர்ந்த கார்த்திக் பாபு என்கிற பேரூர் கார்த்திக், 40, என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். --மொபைல் போனுடன் தப்ப முயன்றவர் கைது
கோவை வெங்கடாபுரத்தை சேர்ந்தவர் சக்திவேல், 28; விற்பணை பிரதிநிதியாக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் அவினாசி ரோடு லட்சுமி மில் சிக்னல் அருகே நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் அவரிடம் தனது நண்பர் ஒருவருக்கு போன் பேச வேண்டும் என மொபைல் போனை வாங்கியுள்ளார். பின் அந்த நபர் மொபைல் போனுடன் தப்பிச்செல்ல முயன்றார். உடனே மணிகண்டன் சத்தம் போட்டு அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அந்த நபரை பிடித்தார். தொடர்ந்து அந்த நபரை ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் கோவை ஜெயசிம்மபுரத்தை சேர்ந்த மணிகண்டன், 37, என்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். -போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது
கோவை ஆர்.எஸ்., புரம் போலீசார் தடாகம் ரோடு சுண்டபாளையம் சந்திப்பில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தார். அதில் அவரிடம் போதை மாத்திரைகள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த ஹிலால், 32, என்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து ஹிலாலை கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து,10 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.