| ADDED : ஜூன் 27, 2024 09:50 PM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு - சொலவம்பாலயம் செல்லும் ரோட்டில் மழை நீர் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.கிணத்துக்கடவு ஆர்.எஸ்.ரோட்டில் இருந்து சொலவம்பாளையம் செல்லும் ரோட்டில், வாகன போக்குவரத்து அதிகமுள்ளது. இந்த ரோடு ஆங்காங்கே சேதம் அடைந்து உள்ளதால், வாகன ஓட்டுநர்கள் தடுமாறி செல்கின்றனர்.மழை நேரத்தில் இந்த ரோட்டில் உள்ள பள்ளங்களில், மழை நீர் தேங்கி நிற்பதால், பைக் ஓட்டுநர்கள் ஆழம் தெரியாமல் பைக்கை விட்டு சிரமப்படுகின்றனர். மேலும், சிலர் பைக்குடன் கீழே சரிந்து விழுகின்றனர்.மேலும், இந்த ரோட்டில் அரசு டாஸ்மாக் மதுபானக்கடை, இ.பி., அலுவலகம் செல்லும் ரோட்டின் வளைவு பகுதி மற்றும் அரசம்பாளையம் செல்லும் ரோட்டின் வளைவு பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளது.இதனால், வாகன ஓட்டுநர்கள் விபத்து அபாயத்தை கருத்தில் கொண்டு, இந்த வழியை தவிர்த்து, பொள்ளாச்சி - கோவை ரோடு வழியாக சுற்றி செல்கின்றனர்.இந்த ரோடு சொலவம்பாலயம் வரை கற்கள் பெயர்ந்து இருப்பதால் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து வரும் விவசாயிகளுக்கும் தவிர்த்து வருகின்றனர். நெடுஞ்சாலைத்துறை சார்பில் இந்த ரோட்டை விரைவில் சீரமைக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.