கோவை:கோவை கலெக்டர் கிராந்திகுமார் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து, கருமத்தம்பட்டி நகராட்சி மற்றும் நீலாம்பூர், சின்னியம்பாளையம் ஊராட்சி பகுதிகளில் இருந்த அனுமதியற்ற விளம்பர பலகைகள் நேற்று அகற்றப்பட்டன. இரும்பு சாரங்களை வெட்டி அகற்றாவிட்டால், கட்டட உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில், சாலைகளுக்கு அருகில் விளம்பர பலகைகள் வைக்க, தடை விதிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு மற்றும் கோவை மாவட்ட நிர்வாகம் தரப்பில் எவ்வித அனுமதியும் தரப்படுவதில்லை. அனுமதியின்றி, கட்டடங்களுக்கு உச்சியில் மெகா சைஸ் விளம்பர பலகைகள் வைக்கப்படுவது வாடிக்கையாகி விட்டது. சில மாதங்களுக்கு முன், கோவையில் அனைத்து பகுதிகளிலும் விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன. லோக்சபா தேர்தல் நடத்தும் பணியில் அதிகாரிகளின் கவனம் திரும்பியதும், மீண்டும் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டன.கருமத்தம்பட்டி நகராட்சியில், இரும்பு சாரம் சரிந்து விழுந்து மூவர் இறந்த இடத்துக்கு அருகாமையிலேயே ஏராளமான விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு இருந்தன.இதேபோல், அவிநாசியில் இருந்து கோவை நோக்கி வரும் சாலையில், மேம்பாலத்துக்கு அருகாமையில், வாகன ஓட்டிகள் கவனத்தை திசைதிருப்பும் வகையில், நீலாம்பூர் ஊராட்சியில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு இருந்தன.இதன் தொடர்ச்சியாக, சின்னியம்பாளையம் ஊராட்சியில் உள்ள கட்டடங்களிலும் அனுமதியற்ற விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு இருந்தன. இது, கலெக்டர் கிராந்திகுமார் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.இதையடுத்து, அனுமதியற்ற விளம்பர பலகைகளை உடனடியாக அகற்ற, கருமத்தம்பட்டி நகராட்சி மற்றும், சூலுார் ஒன்றிய அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.நேற்று, நீலாம்பூர் மற்றும் சின்னியம்பாளையம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்த அனைத்து விளம்பர பலகைகளும் அகற்றப்பட்டன. இதேபோல், கருமத்தம்பட்டி ஊராட்சியிலும் அகற்றப்பட்டு, கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. 'அதிகபட்ச அபராதம் விதிப்போம்'
வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராஜூ கூறுகையில், ''அனுமதியின்றி விளம்பர பலகைகள் வைக்கப்பட்ட இரும்பு சாரங்களை உடனடியாக வெட்டி அகற்ற வேண்டும். இல்லையெனில், ஜூன் 4ல் தேர்தல் நடத்தை விதிமுறை தளர்வு செய்தபின், அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் தடை உத்தரவை மீறி, அனுமதியின்றி விளம்பர பலகை வைக்க அனுமதித்த குற்றத்துக்காக, கட்டட உரிமையாளர்களுக்கு அதிகபட்ச அபராதத் தொகை விதிக்கப்படும். இதேபோல், குப்பைகள், செப்டிக் டேங்க் கழிவுகள், ஊராட்சி பகுதிகளில் உள்ள குட்டைகளில் கொட்டப்படுகின்றன. அவ்வாகனங்களை பறிமுதல் செய்வதோடு, சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர்களுக்கு, அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும்,'' என்றார்.
'சாரங்களையும் அகற்ற வேண்டும்'
சூலுார் வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) முத்துராஜூ, அனைத்து ஊராட்சிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'விளம்பர பலகைகள் மூலமாக ஏற்படும் விபத்துகளை தடுக்க, அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பர பலகைகளையும், முற்றிலுமாக அகற்ற வேண்டும்; இரும்பு சாரங்களையும் சேர்த்து முழுமையாக அகற்றி இருப்பதை உறுதி செய்ய, கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். அனைத்து விளம்பர பலகைகளும் அகற்றப்பட்டதை உறுதி செய்து, சான்று சமர்ப்பிக்க வேண்டும். இப்பணிகளை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் கண்காணிக்க வேண்டும். தவறும் பட்சத்தில், நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறியுள்ளார்.