| ADDED : மார் 24, 2024 11:56 PM
அன்னுார்:குமாரபாளையத்தில் 60 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் நடுநிலைப் பள்ளியில், மாணவர் சேர்க்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.குமாரபாளையத்தில், 60 ஆண்டுகளுக்கு மேலாக, அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழ், ஆங்கிலம் என இரு வழியிலும், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்கப்படுகிறது. தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்போடு, கணினிகள் மற்றும் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. காலை சிற்றுண்டி திட்டம், மதிய உணவு திட்டம் இங்கு உள்ளது. இப்பள்ளி வளாகத்திலேயே இரண்டு வயது முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையம் உள்ளது.ஸ்மார்ட் வகுப்பறை, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும்படி நிறுவப்பட்டுள்ளது. கராத்தே, யோகா, ஆங்கிலம் பேசும் திறன் என பல்வேறு கூடுதல் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.புத்தகம், நோட்டு, கற்றல் உபகரணங்கள் என அனைத்தும் இலவசம். ஆண்டுக்கு நான்கு சீருடைகள், காலணி, புத்தகப் பை வழங்கப்படுகிறது, எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 'வருவாய் வழித்திறன் தேர்வு, மாவட்ட அளவிலான கலை இலக்கிய போட்டி, அறிவியல் கண்காட்சி என பல போட்டிகளில் இப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதித்துள்ளனர்.தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது,' என, பள்ளி தலைமை ஆசிரியை சுசீலா தெரிவித்துள்ளார்.