கோவை:சுங்கம் பைபாஸ் அருகே கஞ்சா, வலி நிவாரணி மாத்திரைகளுடன் ஐந்து பேரை கைது செய்த மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், மேலும் நான்கு பேரை தேடுகின்றனர்.உக்கடம் - சுங்கம் பைபாஸ் ரோடு, தனியார் கல்லுாரி செல்லும் சந்திப்பு ரோட்டில் கஞ்சா விற்பனை நடப்பதாக, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு, நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த போலீசார், சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த நபர்களை பிடித்து விசாரித்தனர்.அவர்களை சோதனையிட்டபோது, 1.410 கிலோ கஞ்சா, போதைக்காக பயன்படுத்தப்படும், 200 வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தன. இதையடுத்து, மூன்று மொபைல் போன்கள், இரு சக்கர வாகனம் உள்ளிட்டவற்றையும், போலீசார் பறிமுதல் செய்தனர்.அங்கிருந்தவர்களில் திரைத்துறையில், 'ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்'களாக பணிபுரியும், தெற்கு உக்கடம், புல்லுக்காடு பகுதியை சேர்ந்த யாசிக் லாகி,26, பூளுவபட்டியை சேர்ந்த மரியா,31, சென்னையை பூர்வீகமாக கொண்டு தொண்டாமுத்துாரில் வசிக்கும் ஸ்நேகா ஸ்ரீ,31 மற்றும் கரும்புக்கடையை சேர்ந்த முஜிப் ரகுமான்,27, தடாகம் ரோடு, முனியப்ப கோவில் வீதியை சேர்ந்த கிருஷ்ணன்,24 ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.தலைமறைவான கோவை கல்லாமேடு பகுதியை சேர்ந்த அப்துல்கலாம், கரும்புக்கடை, பூங்கா நகர் ஆசிக் செரீப், சவுகார் நகர் ரிஸ்வான், பீஹாரை சேர்ந்த சச்சின் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இவர்களது பின்னணி குறித்தும், போலீசார் விசாரிக்கின்றனர்.