| ADDED : ஜூலை 17, 2024 12:35 AM
வால்பாறை;கனமழை காரணமாக, வால்பாறையில் படகுசவாரி நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணியர் ஏமாற்றமடைந்தனர்.வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியரை மகிழ்விக்கும் வகையில், நகராட்சி சார்பில் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, கடந்த ஆண்டு கோடை விழாவின் போது படகுசவாரி துவங்கப்பட்டது. படகுசவாரியில் முதியவர்களுக்கு கட்டணமாக 40 ரூபாயும், சிறுவர்களுக்கு, 20 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக சுற்றுலா பயணியர் வருகை அதிகளவில் இருந்ததால், படகுசவாரியில் பயணம் செய்ய கூட்டம் அலைமோதியது.இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக தென்மேற்குப் பருவமழை தீவிரமாக பெய்வதால், இங்குள்ள ஆறு மற்றும் நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணியர் குளிக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது.அதேபோல், படகுசவாரி நீர்தேக்கத்துக்கு, நீர்வரத்து அதிகமானதால், படகுசவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால், வால்பாறைக்கு வந்த சுற்றுலா பயணியர் படகுசவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.