உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புனித வாரம்; குருத்தோலைகளை ஏந்தி பவனி

புனித வாரம்; குருத்தோலைகளை ஏந்தி பவனி

கோவை;கிறிஸ்தவர்களின் புனித வாரத்தின் முதல் நாளான நேற்று, கோவையில் உள்ள பல்வேறு தேவாலயங்களில், குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது.இயேசு கிறிஸ்துவின் சிலுவைபாடுகளை, நினைவுகூறும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் தவக்காலம் கடைபிடித்து வருகின்றனர். இயேசு சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். இந்தாண்டுக்கான தவக்காலம், பிப்.,14ம் தேதி சாம்பல் புதனில் துவங்கி, மார்ச், 31ம் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தவக்காலத்தின் கடைசி வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது. புனித வாரத்தின் முதல் நாள் குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் நேற்று குருத்தோலை பவனி, சிறப்பு ஆராதனை நடைபெற்றது.இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கைகளில் குருத்தோலையை ஏந்தியவாறு, 'தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா, உன்னதங்களில் ஓசன்னா' என்று பாடியவாறு, பக்தியுடன் பவனியாக சென்றனர். பின்னர் தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக, டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மிக்கேல் அதிதுாதர் தேவாலயத்தில் கோவை மறை மாவட்ட பிஷப் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் பவனி மற்றும் திருப்பலி நடந்தது.தொடர்ந்து, இன்று மாலை மிக்கேல் அதிதுாதர் ஆலயத்தில் பிஷப் தலைமையில் எண்ணெய் மந்திரிக்கும் நிகழ்வு நடக்கிறது. இதில் கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு தேவாலயங்களை சேர்ந்த குருக்கள் பங்கேற்கின்றனர். தொடர்ந்து இந்த வாரம் பெரிய வியாழன், புனித வெள்ளி உள்ளிட்டவை அனுசரிக்கப்பட்டு, ஞாயிறு ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்