| ADDED : ஜூலை 17, 2024 12:18 AM
பெ.நா.பாளையம்;துடியலுார் அருகே உருமாண்டம் பாளையத்தில் பழமையான மரம் விழுந்து வீட்டின் கூரை சேதமானது.துடியலுார் அருகே கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட, 14 வது வார்டு உருமாண்டம்பாளையம், உழைப்பாளர் வீதியில் பழமையான வெள்ளவேளா மரம் உள்ளது. நேற்று முன் தினம் முதல் தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வந்ததால், நேற்று காலை,10:00 மணிக்கு இம்மரம் வேருடன் அருகே வசித்த சீனிவாச பாபு சமையல் அறையின் மீது விழுந்தது. சீனிவாச பாபு மற்றும் அவரது மனைவி சரோஜினி,60, ஆகியோர் ஹாலில் இருந்ததால் உயிர் தப்பினர்.இம்மரத்தின் இன்னொரு கிளை அருகே இன்னொரு வீட்டில் வசிக்கும் மாணிக்கம், 70, வீட்டின் கூரை மீது விழுந்தது. மாணிக்கமும் அவரது மனைவி வசந்தாமணி, 62, ஆகியோரும் வீட்டில் இல்லை. சம்பவ இடத்தை வார்டு கவுன்சிலர் சித்ரா தங்கவேலு, வி.ஏ.ஓ., சிவகுமார் மற்றும் மாநகராட்சி உதவி பொறியாளர் உத்தமன் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு நடத்தினர். பாதிக்கப்பட்ட தம்பதியினருக்கு அரசு சார்பில் உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்தனர்.