பொள்ளாச்சி;கோவில்களில் வழிபாட்டுக்கு செல்லும் பக்தர்களிடம் பிரசாதம் வழங்கி, தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளக்கூடாது என்று, தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது.ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும், கோவில் செயல் அலுவலர்களுக்கு, கோவை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஒரு வழிகாட்டி நெறிமுறையை வழங்கியுள்ளார்.அதில் கூறியிருப்பதாவது:ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களை நிர்வகிக்கும் செயல் அலுவலர்கள் மற்றும் உதவி கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் விழிப்போடு இருப்பது அவசியம்.கட்சி சின்னம் அணிந்தவர்கள், கட்சி சின்னம் பொறித்த வேஷ்டி, துண்டு, தொப்பி, சட்டை அணிந்தவர்கள் கோவிலுக்குள் சென்று பிரசாரம் செய்யவோ, பிரசாதம் வினியோகிக்கவோ, பக்தர்களுக்கு இலவசமாக பொருட்களை கொடுப்பதோ கூடாது.அதே சமயம், வழிபாட்டுக்கு வரும் பக்தர்களை இடைமறித்து, அவர்களது கவனத்தை திசை திருப்ப முயற்சிப்பதோ, துண்டு பிரசுரங்களை வினியோகிப்பதோ தவறு.கோவில் வளாகத்திலோ, வாசலிலோ நின்று பக்தர்களிடம் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளக்கூடாது. அப்படி செய்பவர்களின் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை, கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கேமராக்களின் வாயிலாக பதிவு செய்து, தேர்தல் அலுவலர்களிடம் செயல் அலுவலர்கள் புகார் செய்யலாம்.அதன் பேரில், சம்பந்தப்பட்ட வேட்பாளர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, வெவ்வேறு பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்யப்படும்.இவ்வாறு, அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.இது குறித்து, அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பக்தர்கள் இறைவழிபாட்டுக்கும், மன நிம்மதிக்காகவும் வருகை தரும் இடம் கோவில். அங்கு அரசியல் கட்சியினர் அத்துமீறி நுழைவதை தவிர்க்க வேண்டும். மீறுவோர் மீது ஆதாரங்களுடன், புகார் தந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,' என்றனர்.