| ADDED : ஜூலை 16, 2024 11:53 PM
கோவை;தமிழகத்தில் மீண்டும் மின்சார கட்டணம், 4.83 சதவீதம் உயர்த்தி இருப்பது, ஜவுளித்துறையை மிகுந்த சிரமத்துக்கு உள்ளாக்கும். பெரும்பாலான தொழில்முனைவோர் தொழிலை விட்டு வெளியேற வேண்டிய மோசமான சூழல் ஏற்படும் என்று, ஓப்பன் எண்ட் ஸ்பின்னிங் மில் அசோசியேஷன் தெரிவித்துள்ளது.அதன் தலைவர் அருள்மொழி கூறியதாவது:தமிழகத்தில் மின்கட்டணம் 4.83 சதவீதம் உயர்த்தி இருப்பது ஜவுளித்துறையை மிகுந்த சிரமத்துக்குள்ளாக்கியுள்ளது. மின்கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 35 பைசா, டிமாண்ட் சார்ஜ் கி.வா.,க்கு 35 ரூபாய் உயர்த்தியுள்ளது.இது சிறுகுறு தொழிற்சாலைகள், 112 கி.வா., மின் இணைப்பு உள்ள எல்.டி. மற்றும் சி.டி., இணைப்புதாரர்கள் மாதம் 25,000 ரூபாய் அதிகம் செலுத்த வேண்டும். ஏற்கனவே கடந்த ஆண்டு, 75,000 ரூபாய் மாதம் தோறும் அதிகமாகிவிட்டது.இத்தகைய மின்கட்டண உயர்வு, மற்ற மாநில ஜவுளி தொழில் துறையினருடன் தமிழக ஜவுளித்துறையினர் போட்டி போட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான தொழில்முனைவோர், தொழிலை விட்டு வெளியேற வேண்டிய மோசமான சூழல் ஏற்பட்டுள்ளது.பிற மாநிலங்களில் ஏரா ளமான சலுகைகளை, தொழில்துறையினருக்கு வழங்கி வருகின்றனர். தமிழகத்தில் மட்டும் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில், மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.அதனால் தமிழக அரசு, மின்கட்டண உயர்வை கைவிட்டு ஜவுளித்துறைக்கு சலுகைகளை வழங்கினால் மட்டுமே, தமிழகத்தில் ஜவுளித்தொழில் வளர்ச்சி அடையும். தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு, மின்கட்டணத்தை குறைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.