பொள்ளாச்சி:வால்பாறை அருகேயுள்ள, சோலையாறு அணையின் நீர்மட்டம் இரண்டு நாட்களில் எட்டு அடி உயர்ந்துள்ளது.பி.ஏ.பி., திட்டத்தின் முக்கிய அணையாக வால்பாறை அருகே, சோலையாறு அணை உள்ளது.மொத்தம், 160 அடி உயரம் உள்ளசோலையாறு அணையின் நீர்பிடிப்பு பகுதி, 37 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.அணை பகுதியில், இரண்டு மின் நிலையங்கள் உள்ளன. அதில், சோலையாறு மின் நிலையம் - -1 இயக்கப்பட்டு, 84 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு, பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.சோலையாறு மின் நிலையம்- - 2 இயக்கப்பட்டு, 16 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு, ஒப்பந்தப்படி கேரளாவுக்கு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.தமிழக - கேரளா ஒப்பந்தம் அடிப்படையில் அமைக்கப்பட்ட சோலையாறு அணை, தமிழகத்தின் உயரமான அணையாக கருதப்படுகிறது.கடந்தாண்டு பருவமழை இல்லாததால், அணைக்கு நீர் வரத்து குறைந்து, அணை நீர்மட்டம், 11 அடிக்கு கீழ் சரிந்தது. இந்நிலையில், பருவமழை அவ்வப்போது பெய்து வருவதால், அணை நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது.தொடர் மழையால், சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம், ஐந்து அடியாகவும், நேற்று மூன்று அடி என, இரண்டு நாட்களில் மொத்தம், எட்டு அடி உயர்ந்துள்ளது.மொத்தம், 160 அடி உயரம் உள்ள சோலையாறு அணை நீர்மட்டம் நேற்று காலை, 73.88 அடி நீர்மட்டம் இருந்தது. வினாடிக்கு, 1,189.93 கனஅடி நீர் வரத்து இருந்தது.பி.ஏ.பி., திட்டத்தின் முக்கிய அணையாக கருதப்படும் சோலையாறு அணையில் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மழை தொடர்ந்து பெய்தால், அணைகளின் முழு கொள்ளளவுக்கு நீர்மட்டம் உயர்ந்து, இந்தாண்டு பாசனத்துக்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழையளவு (மி.மீ.,) வருமாறு:சோலையாறு - 33, பரம்பிக்குளம் - 18, ஆழியாறு - 4, மேல் நீராறு - 78, கீழ் நீராறு - 37, மேல் ஆழியாறு - 2, காடம்பாறை - 17, வால்பாறை - 63, வேட்டைக்காரன்புதுார் - 16.6,பொள்ளாச்சி - 24, மணக்கடவு - 21, சுல்தான்பேட்டை - 2, நெகமம் - 8, நல்லாறு - 9, நவமலை - 3, சர்க்கார்பதி - 10, துாணக்கடவு - 14, பெருவாரிப்பள்ளம் - 23, என, மழையளவு பதிவானது.