| ADDED : ஜூலை 21, 2024 01:17 AM
கோவை:கோவை - அவிநாசி ரோடு மேம்பாலத்தில், பீளமேடு சந்திப்பில் ஏறுதளம் அமைக்கும் இடத்தில், விளாங்குறிச்சி ரோட்டில் வரும் வாகன ஓட்டிகள் வருவதற்கான வழித்தடம் குறித்து, கோவை எம்.பி., ராஜ்குமார் தலைமையில், நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.கோவை - அவிநாசி ரோட்டில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை மேம்பாலம் கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. விளாங்குறிச்சி ரோடு - அவிநாசி ரோடு சந்திக்கும் பீளமேடு ராதாகிருஷ்ணா மில் ஸ்டாப் பகுதியில், ஏறுதளம் அமைப்பதற்கான துாண்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஓடுதளம் அமைக்கும்போது, விளாங்குறிச்சி ரோட்டில் வரும் வாகன ஓட்டிகள், நேரடியாக அவிநாசி ரோட்டுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்படும்.புகார் எழுந்ததையடுத்து, எம்.பி.,ராஜ்குமார் முன்னிலையில் நேற்று கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் (திட்டங்கள்) சமுத்திரக்கனி, உதவி கோட்ட பொறியாளர் அகிலா உள்ளிட்டோர், மேம்பாலம் அமையும் விதத்தை விளக்கினர்.நிலம் கையகப்படுத்தி, 3.75 மீட்டர் அகலத்துக்கு 'சர்வீஸ்' ரோடு அமைக்கப்படும்; ஒரு மீட்டர் அகலத்துக்கு மழை நீர் வடிகால் கட்டப்படும். சர்வீஸ் ரோட்டில் வாகன ஓட்டிகள் சென்று, அவிநாசி ரோட்டில் இணைந்து கொள்ளலாம் என அதிகாரிகள் கூறினர். அதற்கு, நிலம் கையகப்படுத்திய பின், வாகனங்கள் செல்வதற்கு போதிய இட வசதி இருக்கிறதா என கள ஆய்வு செய்து விட்டு, அடுத்த கட்ட பணிகள் மேற்கொள்ளலாம் என முடிவெடுக்கப்பட்டது.நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், 'பீளமேடு சந்திப்பில் ஏறு தளம் அமைக்கும் இடத்தில், தேவையான நிலம் கையகப்படுத்த, பத்திரப்பதிவு செய்யப்பட்டு விட்டது. நிலத்துக்குரிய இழப்பீடு தொகை வழங்கியதும் கையகப்படுத்தும் பணி துவங்கும்' என்றனர்.