உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பேரூராட்சி நிர்வாகம் மீது முறைகேடு புகார்! நடவடிக்கை எடுக்க அ.தி.மு.க., கவுன்சிலர்கள் மனு

பேரூராட்சி நிர்வாகம் மீது முறைகேடு புகார்! நடவடிக்கை எடுக்க அ.தி.மு.க., கவுன்சிலர்கள் மனு

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு பேரூராட்சி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் மனு அளித்துள்ளனர்.கிணத்துக்கடவு பேரூராட்சி நிர்வாகத்தில் நடக்கும் முறைகேடுகளை சரி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிணத்துக்கடவு பேரூராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.மனுவில் கூறியிருப்பதாவது:பேரூராட்சி வார்டு, 1 மற்றும் 4ல், கடந்த 2.5 ஆண்டுகளில் பேரூராட்சி நிர்வாகத்தின் வாயிலாக பொதுநிதியில் இருந்து எந்த பணிகளும் நடக்கவில்லை. எம்.எல்.ஏ., தொகுதி நிதியில் மட்டும் சில பணிகள் நடந்தது.பேரூராட்சி நிர்வாகம், வீட்டு மனையிடங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும் போது, லே-அவுட்டில் முறையான சாலை வசதி, வடிகால் வசதி, மேல்நிலை குடிநீர் தொட்டி போன்றவைகள் முறையாக இல்லாமலே பரிந்துரை செய்யப்படுகிறது.பேரூராட்சி நிர்வாகத்தின் பரிந்துரையின் பேரில், டி.டி.சி.பி., அப்ரூவல் பெற்று வருகின்றனர். மேலும், கல் குவாரிகளாக இருந்த பாறை குழிகளை மூடி அதனை லே-அவுட் பகுதியாக மாற்றி விற்பனை செய்து வருவதையும், பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் பரிந்துரை செய்கிறது.பழுதடைந்த வீட்டுக் குடிநீர் இணைப்பு குழாய்களை, பேரூராட்சி துாய்மை பணியாளர்கள் வாயிலாக சரி செய்து, அதற்கு உண்டான தொகையை தனியார் ஒப்பந்ததாரர்கள் பெயர்களில் வழங்கி முறைகேடு நடக்கிறது.பேரூராட்சி பகுதிகளில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் பொது சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 15வது வார்டு காமராஜர் காலனியில், 72 குடும்பங்களுக்கு பாத்தியப்பட்ட பொதுக்கிணறு உள்ளது. அந்த வார்டு கவுன்சிலர் தேவி, கிணற்றை மூடி தன் வீட்டிற்கு சுற்றுச்சுவர் கட்டியுள்ளார். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.மன்ற கூட்டத்தின் போது, தீர்மான பதிவேட்டில் தகவல்கள் பதிவு செய்யாமல் உறுப்பினர்களிடம் கையொப்பம் பெற்றுக்கொண்டு, அதன்பின் உறுப்பினர்களுக்கு தெரியாமலே தீர்மானங்கள் பதிவு செய்யப்படுகிறது.முதல் மற்றும் 4வது வார்டில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எந்த பணிகளும் நடப்பதில்லை. குறிப்பாக, தினசரி குப்பை கூட சேகரிப்பதில்லை. பேரூராட்சி பொது நிதி மற்றும் அரசின் சிறப்பு நிதி, இந்த இரண்டு வார்டுகளுக்கும் புறக்கணிக்கப்படுகிறது.பேரூராட்சியில் மன்றக் கூட்டத்தில் முறையாக செலவின கணக்குகள் தாக்கல் செய்வதும் இல்லை. எனவே, பேரூராட்சி நிர்வாகத்தின் முறைகேடுகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, 'கிணத்துக்கடவில் உள்ள 15 வார்டுகளிலும் பணிகள் நன்றாக நடந்து வருகிறது. தனிப்பட்ட முறையில் பாகுபாடு பார்ப்பதில்லை. மேலும், வரவு, செலவு கணக்கு கூட்டத்தில் தெரிவிக்கப்படுகிறது. செலவினங்கள் குறித்து செயல் அலுவலரிடம் கணக்ககுகள் உள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை