| ADDED : மே 06, 2024 12:23 AM
கோவை:கண்களை மூடி பிரார்த்தனை செய்த பெண்ணிடம் நகைகளை அபேஸ் செய்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கோவை இடையர் வீதியை சேர்ந்தவர் வீனா, 43; அவர் ஆர்.ஜி., வீதியில் உள்ள ஜெயின் கோவிலில் வழிபட்டு, வெளியே வந்தார். அப்போது அங்கு வந்த, 50 மற்றும், 60 வயது மதிக்கத்தக்க இருவர் அவரிடம், குஜராத் பாலீத்தினா கோவிலில் இருந்து வருகிறோம், ரேகா மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என வழி கேட்டுள்ளனர்.அவர் தனக்கு தெரியாது என்று கூறி சென்றார். அவரை பின் தொடர்ந்த இருவரும் வீனாவிடம் கோவில் வழிபாட்டிற்கு ஒரு கிலோ அரிசி வாங்கி தருமாறு கேட்டுள்ளனர். அவரும் வாங்கி கொடுத்தார். அதனை பெற்ற அவர்கள், வீனாவிடம் உங்களது கணவரின் தொழில் நஷ்டத்தில் சென்று கொண்டு இருக்கிறதா என கேட்டுள்ளனர். அவரும் ஆமாம் என்றார்.அதற்கு அந்த இருவரும், நகைகளை கழற்றி பையில் வைத்து, 25 முறை மகாவீர் என கண்களை மூடி கூறினால் அனைத்து பிரச்னைகளும் தீர்ந்து விடும் என்றுள்ளனர். அதனை உண்மை என நம்பி வீனா, 5 பவுன், 4 கிராம் தங்கம், 4 கிராம் வெள்ளி ஆகியவற்றை கழற்றி பையில் வைத்து, அவர்களிடம் கொடுத்து அருகில் இருந்த கோவிலை பார்த்து வேண்டினார்.அந்த சமயத்தில் அந்த மர்ம நபர்கள் இருவரும் நகையுடன் அங்கிருந்து தப்பி சென்றனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வீனா வெரைட்டி ஹால் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.