மழை நீரை சேமித்து பூமியை காப்பாற்றுவதை, நம் ஒவ்வொருவரின் கடமையாக கருத வேண்டும் என்று அறிவுறுத்துகிறாார், கோயமுத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர் சங்கம் (காட்சியா) செயற்குழு உறுப்பினர் சேனாபதி.அவர் கூறியதாவது:மழை நீர் சேமிப்பை, அத்தியாவசியமான கடமையாக அனைவரும் மேற்கொண்டு, நமக்கும் நம் எதிர்கால சந்ததிகளுக்கும் பயன்படுமாறு செய்ய வேண்டும். மழை நீர் சேமிப்பு, இன்று பெயரளவில், அரசின் ஒப்புதலுக்காக மட்டுமே பெரும்பாலான கட்டடங்களில் அமைக்கப்படுகிறது. அவ்வாறு இல்லாமல், முறையாக அமைத்து அதை சரியாக பராமரிக்க வேண்டும். மாடியில் சேகரிக்கலாம்
நம் வீட்டின் திறந்தவெளி மற்றும் மொட்டை மாடி பகுதிகளில், மழை காலங்களில் கிடைக்கும் நீரை, குழாய்கள் வாயிலாக முறையாக மழைநீர் தொட்டியை சென்றடையுமாறு அமைக்க வேண்டும்.மழைநீர் தொட்டியானது, சுவராகவோ அல்லது ரெடிமேட் வளையங்களாகவோ கட்டடத்தின் சுவரிலிருந்து, சிறிது தள்ளி அமைக்க வேண்டும்.அவ்வாறு அமைக்கும் போது, அவரவர் வீடுகளில் உள்ள இட வசதிக்கு ஏற்ப குறைந்தபட்சம், 3 அடி அகலம் முதல் 5 அடி ஆழம் வரையும், இடவசதியை பொறுத்து, 8 அடி அகலம் மற்றும் 10 அடி ஆழம் வரையும் அமைத்து, அதனுள் பாதிக்கு மேல் கருங்கற்கள் மற்றும் உடைந்த செங்கற்களை கொண்டு நிரப்ப வேண்டும். மேற்கொண்டு சிறிய கற்கள் அல்லது மணல் கொண்டு நிரப்ப வேண்டும். மேற்பகுதியில் சிறிது வெற்றிடம் விட வேண்டும்.இன்றைய காலகட்டத்தில் பூவி வெப்பமாகுதல் மற்றும் குடிநீர் தட்டுப்பாடுகளை குறைக்க, அனைவரும் மழைநீர் தொட்டி அமைக்க வேண்டும். ஏற்கனவே அமைத்த தொட்டியை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும்.