உடுமலை,:பொள்ளாச்சி லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளர் வசந்தராஜன், நேற்று உடுமலை சட்டசபை தொகுதி, குடிமங்கலம், பொன்னேரியில் பிரசாரத்தை துவங்கினார். ஒன்றிய பகுதி முழுவதும் மக்களை சந்தித்து ஓட்டு சேகரித்தார்.அப்போது அவர் பேசியதாவது: உடுமலை, குடிமங்கலம் ஒன்றியங்களில், நீராதாரங்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டு, நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு சென்று, குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.குடிமங்கலம் ஒன்றியத்தின் முக்கிய நீராதாரமான, உப்பாறு ஓடையை மீட்க, தொலைநோக்கு திட்டங்கள் செயல்படுத்தப்படும். மழை நீர் ஓடைகளை ஆக்கிரமித்துள்ள, சீமைக்கருவேல மரங்களை அகற்றி, தடுப்பணைகள் அமைத்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த திட்டமிடப்படும்.குடிமங்கலம் ஒன்றிய மக்கள், குடிநீருக்காக தவித்தும், திராவிட கட்சிகள் கண்டுகொள்ளவில்லை. கூட்டுக்குடிநீர் திட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டு, அனைத்து குடியிருப்புகளுக்கும், சீராக குடிநீர் வினியோகிக்கப்படும்.மத்திய அரசு, 'ஜல்ஜீவன்' திட்டத்துக்கு ஒதுக்கிய நிதியை, மாநில அரசு முறைகேடு செய்து மக்களை ஏமாற்றி விட்டது. பிரதமர் மோடி, கிராமப்புற வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.இத்திட்டங்கள் தொடர்ந்தால், அனைத்து கிராமங்களும் வளர்ச்சியடைவது உறுதியாகும். தென்னை விவசாயிகள், வாழ்வாதாரத்தை இழந்தும், தி.மு.க., அரசு கண்டுகொள்ளவில்லை. தேர்தல் நெருங்கியதும், வாடல் நோய் தாக்கிய மரங்களை அகற்ற நிதி ஒதுக்குவதாக, கண்துடைப்பு செய்கின்றனர்.நோய்த்தாக்குதல் துவங்கிய போதே நடவடிக்கை எடுத்திருந்தால், பல லட்சம் மரங்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும். அதே போல், தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கினால், விவசாயிகள் பயன்பெறுவார்கள். 'டாஸ்மாக்' மதுக்கடை வருவாய் பாதிக்கும் என்பதால், தென்னை விவசாயிகளின் கோரிக்கையை தி.மு.க., கண்டுகொள்ளவில்லை.தங்கள் கட்சி குடும்பத்தினர் வருவாய்க்காக, ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் தி.மு.க., வினர் அழித்து வருகின்றனர்.பட்டுக்கூடுகளுக்கு ஆதார விலை, விவசாய விளைபொருட்களை இருப்பு வைக்க குடிமங்கலத்தில், கிடங்கு வசதி ஏற்படுத்தி தரப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.பிரசாரத்தின் போது, பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதீஸ்வரி, குடிமங்கலம் வடக்கு ஒன்றிய தலைவர் குணசேகரன், செயலாளர் வெள்ளியங்கிரி, அ.ம.மு.க., ஒன்றிய செயலாளர் சிவானந்தம் மற்றும் கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.