| ADDED : ஜூலை 16, 2024 11:32 PM
வால்பாறை;சரக்கு வாகனங்களில் அதிக லோடு ஏற்றி செல்லும் வாகனங்களால், மலைப்பாதையில் விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில், 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. வால்பாறை மலைப்பகுதிக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள், பொள்ளாச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து கொண்டுவரப்படுகின்றன.வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் நாள் தோறும் நுாற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்கள், சரக்கு வாகனங்கள் இயக்கப்படுகின்றன. சமீப காலமாக, ரோடு விரிவாக்கத்திற்கு பின் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக லோடு ஏற்றி வாகனங்கள் செல்கின்றன. அளவுக்கு அதிகமான லோடு ஏற்றி செல்வதால், வாகனங்கள் மலைப்பாதையில் அடிக்கடி விபத்துக்குள்ளாவது வாடிக்கையாகி விட்டது.மலைப்பாதையில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதோடு, பின்னால் செல்லும் வாகனங்களும் விபத்துக்குள்ளாகின்றன.வால்பாறையில் தற்போது பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மலைப்பாதையில் இயக்கப்படும் கனரக வாகனங்ளால், ரோட்டில் மண் சரிவு ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சரக்கு வாகனத்தில் 'ஓவர் லோடு' கொண்டு செல்வதை, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.