| ADDED : மார் 24, 2024 11:54 PM
சூலுார்;சூலுார் வட்டார முருகன் கோவில்களில் பங்குனி உத்திர பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.பங்குனி உத்திரத்தை ஒட்டி, சூலுார் வட்டார முருகன் கோவில்களில், சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நேற்று நடந்தன. செஞ்சேரிமலையில் உள்ள மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவிலில் காலை, 10:30 மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன.12:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. மாலையில், அடிவாரம் முதல் சன்னதி வரை உள்ள படிகளுக்கு படி பூஜை நடத்தப்பட்டது. கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவில், சின்னியம்பாளையம் வேல்முருகன் கோவில், பொன்னாண்டாம்பாளையம் சென்னியாண்டவர், கண்ணம்பாளையம் பழனி ஆண்டவர், காங்கயம் பாளையம் சென்னியாண்டவர், குமரன் கோட்டம் உள்ளிட்ட கோவில்களில் பங்குனி உத்திர சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். சாலையூரில், பல நூறு ஆண்டுகள் பழமையான பழனி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவில் சித்தர்களால் வழிபட்ட பெருமை உடையது. இங்கு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, இன்று காலை 6:00 மணிக்கு, பெரு திருமஞ்சனம் நடக்கிறது. காலை 9:00 மணிக்கு மகா அபிஷேகமும், கலசங்களுக்கு அபிஷேகமும் நடக்கிறது. மதியம் 12:00 மணிக்கு பால், நெய், பன்னீர், சந்தனம் என 16 வகை திரவியங்களால் பழனியாண்டவருக்கு அபிஷேகமும், அலங்கார பூஜையும், புஷ்ப அர்ச்சனையும் நடக்கிறது.சுவாமி உட்பிரகாரத்தில் உலா வந்து அருள் பாலிக்கிறார். பக்தர்கள் பங்கேற்று இறையருள் பெற விழா குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர். அன்னுார் மன்னீஸ்வரர் கோவில், எல்லப்பாளையம் பழனி ஆண்டவர் கோவில், குன்னத்தூர் பழனி ஆண்டவர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் இன்று பங்குனி உத்திர திருவிழா நடைபெறுகிறது.