உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஓடுதளம் முழுதும் ஒட்டுவேலை; புதுப்பிப்பது எப்போது? தடுமாறி விபத்துக்குள்ளாகும் வாகனங்கள்

ஓடுதளம் முழுதும் ஒட்டுவேலை; புதுப்பிப்பது எப்போது? தடுமாறி விபத்துக்குள்ளாகும் வாகனங்கள்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் மழையால், மரப்பேட்டை முதல், ஊஞ்சவேலாம்பட்டி வரையிலான நான்கு வழிச்சாலை சேதமடைந்துள்ளது. சில இடங்களில் அரைகுறையாக 'பேட்ச் ஒர்க்' செய்யப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.பொள்ளாச்சி அருகே, மரப்பேட்டை முதல் ஊஞ்சவேலாம்பட்டி வரையிலான தேசிய நெடுஞ்சாலை, 4.5 கி.மீ., துாரம் உள்ளது. தென்மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலையாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை தடுக்க, சென்டர்மீடியன், சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டுள்ளது.சமீபகாலமாக, பெய்யும் மழையால், நான்கு வழிச்சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே பெரும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில், அரைகுறையாக 'பேட்ச் ஒர்க்' பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.இரவில், பள்ளங்களை அடையாளம் காண முடியாமல் வாகன ஓட்டுநர்கள் பரிதவித்து வருகின்றனர். இரு சக்கர வாகன ஓட்டுநர்கள், ரோட்டில் உள்ள பள்ளங்களால் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். கடந்த மாதம், இந்த சாலையில் நடந்த இரு வேறு விபத்துக்களில், மூன்று பேர் உயிரிழந்தனர். எனவே, சாலையை சீரமைப்பதுடன், விழிப்புணர்வு அறிவிப்பு பலகையை வைக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.தன்னார்வலர்கள் கூறியதாவது: சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில், டயர் இறங்கி ஏறுவதை தவிர்க்க முற்பட்டு, வாகன ஓட்டுநர்கள், தங்களது வாகனங்களை இயக்குகின்றனர். அப்போது, பின்னால் செல்லும் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது.இதற்கு, சாலையை விரைந்து புதுப்பிக்க நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த சாலையில், இருபுறமும் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் இருந்தும், நெடுஞ்சாலை நோக்கி திடீரென இயக்கப்படும் வாகனங்களால், விபத்து ஏற்படுகிறது.எனவே, இவ்வழித்தடத்தில், குறிப்பிட்ட வேகத்தில் வாகனங்கள் செல்லவும், சர்வீஸ் ரோடு சந்திப்புகளை அறிந்து கொண்டு அதற்கேற்ப வேகத்தை குறைக்க வழிவகை செய்யும் வகையில் விழிப்புணர்வு அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.ரோட்டை முழுமையாக புதுப்பிக்க வேண்டும்.அதேபோன்று, சர்வீஸ் ரோட்டுக்கும், பிரதான ரோட்டுக்கும் இடையே உள்ள தடுப்பை அகற்றி, ரோட்டை அகலப்படுத்த வேண்டும். பஸ் ஸ்டாப் பகுதியில் மட்டும், 'பஸ் பே' அமைக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை